தென்னையில் வாடல் நோயை கட்டுப்படுத்த கள ஆய்வு தினமலர் செய்தி எதிரொலியாக நடவடிக்கை
உடுமலை;குடிமங்கலம் வட்டாரத்தில், கிணற்றுப்பாசனத்துக்கு, பிரதான சாகுபடியாக தென்னை உள்ளது. இச்சாகுபடியில் பல்வேறு காரணங்களால், நோய்த்தாக்குதல் பரவுவது தொடர்கதையாக உள்ளது.அவ்வகையில், தற்போது, ஆலாமரத்துார், வல்லக்குண்டாபுரம் சுற்றுப்பகுதிகளில், தென்னை மரங்களில் புது விதமான நோய்த்தாக்குதல் பரவி வருவது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, ஆலாமரத்துார், விருகல்பட்டி, இலுப்பநகரம் சுற்றுப்பகுதிகளில், குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் அடங்கிய குழுவினர், தென்னந்தோப்புகளில் ஆய்வு செய்தனர்.அக்குழுவினர் கூறியதாவது: ஆலாமரத்துார் சுற்றுப்பகுதிகளில், ஆய்வு நடத்தியதில், தென்னை மரங்களில், தஞ்சாவூர் வாடல் நோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டது. முறையான நோய் மேலாண்மை முறைகளை பின்பற்றினால், நோயை முழுமையாக கட்டுப்படுத்தலாம்.'கோனோடெர்மா லுாசிடம்' என்ற காளான் வகை பூஞ்சாணம் தாக்குவதால், தஞ்சாவூர் வாடல் நோய் ஏற்படுகிறது. ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்துக்கு மண் மற்றும் பாசன நீர் வாயிலாக பரவும், மண்ணில் நீண்ட காலம் வாழும் தன்மையுடையது.வாழையை ஊடுபயிராக செய்யலாம்; மரத்தை சுற்றி வட்டப்பாத்தி அமைத்து தனித்தனியே சொட்டு நீர் பாசன முறையை பின்பற்ற வேண்டும். நீரின் வாயிலாக இந்நோய் பரவுவதால், கால்வாய் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சக்கூடாது.நோய்தாக்கி இறந்த மரங்களையும், நோய் முற்றிய நிலையிலுள்ள மரங்களையும் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.நோய் மேலாண்மை குறித்த தகவல் மற்றும் ஆலோசனைகளுக்கு, பெதப்பம்பட்டி உள்வட்ட விவசாயிகள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ராஜசேகர் 86755 56865; சங்கவி 81110 55320 என்ற மொபைல்போன் எண்ணிலும், குடிமங்கலம் உள்வட்ட விவசாயிகள் சரவணகுமார் 97891 97648, மதன்குமார் 97867 78651; துணை தோட்டக்கலை அலுவலர் சிவானந்தன் 99449 37010 என்ற மொபைல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, தெரிவித்தனர். நோய் அறிகுறிகள்
தஞ்சாவூர் வாடல் நோய் தாக்கிய மரத்தின் ஓலைகள் வெளிர் மஞ்சள் நிறமாகிய பின்பு அடிமட்டைகள் பழுப்படைந்து, காய்ந்து மரத்தோடு ஒட்டித்தொங்கும்.மட்டைகளை இழுத்தால் வராது. அடிப்பாகத்தில் இருந்து, 3 அடி உயரம் வரை செம்பழுப்பு நிற சாறு வடியும். அப்பகுதியை வெட்டி பார்த்தால், தண்டு பகுதி அழுகி நிறம் மாறி காணப்படும். அனைத்து குரும்பை மற்றும் இளம் காய்கள் உதிர்ந்து விடும்.அதிகளவில் தாக்கப்பட்ட மரங்களில், 'சைலிபோரஸ்' என்ற பட்டை துளைப்பான் கூன் வண்டு தாக்குதல் இருக்கும். மழைக்காலத்தில் மரத்தின் அடிப்பாகத்தில், 'கேனோடெர்மா' பூச்சாணம் காளான் போல காணப்படும்.நோய் முற்றிய நிலையில், இவ்வகை காளான் தடிமானாக, கடினமாக கருஞ்சிவப்பு நிற மேல்பகுதியையும், வெள்ளை நிற அடிப்பகுதியையும் கொண்டிருக்கும்.இத்தகைய அறிகுறிகள் அனைத்தும் தென்பட்டால் அம்மரம் ஆறு முதல் ஓராண்டுக்குள் இறந்து விடும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
'ெஹக்சாகோனசால்' 2 மில்லி மருந்தை 100 மில்லி தண்ணீரில் கலந்து மூன்று மாதத்துக்கு ஒரு முறை நோய் தாக்கிய மரங்களுக்கு வேர் வழியாக செலுத்த வேண்டும்.'டிரைகோடெர்மாவிரிடி' 100-200 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ் 100 கிராம் என்றளவில், 50 கிலோ மட்கிய சாண எருவுடன் கலந்து நோய்த்தாக்கப்பட்ட மரங்களின் அடியே வட்ட பாத்தியில் மண் நன்கு நனையுமாறு 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை ஊற்ற வேண்டும்.ஒரு கிலோ காப்பர் சல்பேட்டினை(மயில் துத்தம்) 50 லிட்டர் தண்ணீரில் கரைத்து கொள்ள வேண்டும். இதற்கு, ஈயம், பித்தளை, இரும்பு பக்கெட்டுகளை பயன்படுத்த கூடாது; பிளாஸ்டிக் வாளியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு கிலோ கிளிஞ்சல் சுண்ணாம்பை தரமான 50 லிட்டர் தண்ணீரில், கரைத்து தனியாக வைத்து கொள்ள வேண்டும். அரை மணி நேரம் கழித்து காப்பர் சல்பேட் கலவையை எடுத்து சுண்ணாம்பு கலவை உள்ள வாளியில் ஊற்ற வேண்டும்.சரியான கலவை தயாரான பின் இக்கலவையில் இருந்து 40 லிட்டர் எடுத்து மரத்தை சுற்றி 2 மீ., வட்டப்பாத்தியில் மண் நன்கு நனையுமாறு 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை ஊற்ற வேண்டும்.