திருட்டு கும்பல் கைது; 25 டூவீலர்கள் பறிமுதல்
திருப்பூர்: திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் டூவீலர் திருட்டில் ஈடுபட்டு வரும் நபர்களை பிடிக்க கமிஷனர் உத்தரவின் பேரில், வடக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.சமீபத்தில் நடந்த டூவீலர் திருட்டு தொடர்பாக கிடைத்த 'சிசிடிவி' பதிவுகளை பார்வையிட்டு தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். அதில், தொப்பி அணிந்தபடி ஒருவர் திருடுவது தெரிந்தது. இதனால், திருட்டு தொடர்பாக திருப்பூர் காலேஜ் ரோட்டை சேர்ந்த அப்துல் ரகுமான், 40 என்பவரிடம் போலீசார் விசாரித்தனர்.மாநகரம், புறநகர் என, மாவட்டத்தின் பல பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் அடையாளம் தெரியாமல் இருக்க தொப்பியை அணிந்தபடி சென்று டூவீலர்களை திருடியது தெரிந்தது. திருடும் டூவீலரை, பி.என்., ரோட்டில் டூவீலர் ஒர்க் ஷாப் நடத்தி வரும் சாமுண்டிபுரத்தை தினேஷ், 32 என்பவரிடம் விற்பது தெரிந்தது.அவர், வத்தலகுண்டை சேர்ந்த தனது நண்பரான சண்முகசுந்தரத்திடம், 33 விற்று வந்தார். டூவீலரை வாங்கும் நபர் கிராம பகுதிகளில் சென்று, 5 ஆயிரம் முதல், 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது தெரிந்தது. டூவீலர் திருட்டில் ஈடுபட்ட அப்துல் ரகுமான், தினேஷ் மற்றும் சண்முக சுந்தரம் ஆகியோரை கைது செய்த தனிப்படை போலீசார், 25 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.