சுகாதாரமற்ற ஓட்டல்களில் அரசு பஸ் நிறுத்த நிர்பந்தம்! போக்குவரத்து கழக ஊழியர்கள் வேதனை
பல்லடம்: சுகாதாரமற்ற ஓட்டல்களில் அரசு பஸ்களை நிறுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக, அரசு பஸ் ஊழியர்கள் வேதனையுடன் புகார் கூறுகின்றனர்.தொலைதுார ஊர்களுக்கு செல்லும் அரசு பஸ்களில் பயணிக்கும் போது, உணவு மற்றும் சிற்றுண்டி சாப்பிட, ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் பஸ்கள் நிறுத்தப்படுவது வழக்கம். கடந்த காலங்களில், பஸ் ஓட்டுநர், நடத்துனர்கள், அவர்களது விருப்பப்படி, பல்வேறு ஓட்டல்கள், பேக்கரிகளில் பஸ்களை நிறுத்தி வந்தனர். தற் போது, நிர்ணயிக்கப்பட்ட ஓட்டல்களில் மட்டும்தான் நிறுத்த வேண்டும் என, நடத்துனர்கள் நிர்பந்திக்கப்படுவதாக போக்குவரத்து ஊழியர்கள் குற்றம்சாட்டு கின்றனர்.இது குறித்து, அரசு பஸ் ஊழியர்கள் கூறியதாவது:ஆளும்கட்சி அமைச்சர்களின் சிபாரிசு செய்யும் ஓட்டல்களில் மட்டுமே உணவு சாப்பிட நிறுத்த வேண்டும் என அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர். இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட ஓட்டல்களில் சாப்பிட்ட பின், அங்கு தான் பஸ் நிறுத்தப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், ஓட்டல் கேஷியர்களிடம் சீல் மற்றும் கையொப்பம் பெற்று வருமாறு நிர்பந்தம் செய்கின்றனர்.இவ்வாறு, குறிப்பிட்ட அந்த ஓட்டல்களில் நிறுத்தாவிட்டால், சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.போக்குவரத்து கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஓட்டல்கள் சிலவற்றில் உணவு தரமானதாக, சுகாதாரமாக இல்லை என்றும், விலை உயர்வு, கலப்படம் என, பல்வேறு குற்றச்சாட்டுகளை பயணிகள் எழுப்புகின்றனர். இருப்பினும், அதிகாரிகளின் நடவடிக்கை பாயும் என்பதால், வேறு வழியின்றி அந்த ஓட்டல்களில் நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.