அரசு பள்ளி தரம் உயர்த்த வேண்டும்: அப்பியாபாளையம் மக்கள் எதிர்பார்ப்பு
திருப்பூர் : திருப்பூர் ஒன்றியம், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, அப்பியாபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில், 300 பேர் படிக்கின்றனர். எட்டாம் வகுப்பு முடிக்கும் இப்பகுதி மாணவர்கள், உயர்நிலை கல்விக்காக, பெருமாநல்லுாரையும் கடந்து வெகு துாரம் செல்ல வேண்டும்.இதுகுறித்து அப்பியாபாளையம் பகுதி மக்கள், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்த மனு:பெருமாநல்லுார், ஈட்டி வீரம்பாளையம், தொரவலுார், வள்ளிபுரம் ஆகிய நான்கு ஊராட்சிகளிலும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இந்த ஊராட்சிகளை சேர்ந்த மாணவ, மாணவியரும் உயர்கல்வி கற்க மிகவும் சிரமப்பட்டுவருகின்றனர்.அப்பியாபாளையம் அரசு நடுநிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள், உயர்நிலை கல்வி பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. பெருமாநல்லுார் வடக்கு பகுதியிலும், 15 கி.மீ., துாரத்துக்கு அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் இல்லை.இதனால், கணக்கம்பாளையம் ரோடு, திருப்பூர் ரோட்டிலுள்ள பள்ளிக்கு தான் செல்ல வேண்டும். தொலை துார பயணம், போக்குவரத்து நெரிசல் காரணமாக, அப்பியாபாளையம் பகுதி பெற்றோர் பலரும் தங்கள் குழந்தைகளை உயர்கல்விக்கு அனுப்ப தயங்குகின்றனர்.இதனால், பள்ளி இடைநிற்றல் அதிகரித்து, குழந்தை தொழிலாளராகவும், இளம் வயது திருமணங்கள் நடக்கும் சூழல் உருவாகி வருகிறது. எனவே, அப்பியாபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.