வந்தார்... கொடுத்தார்... சென்றார்!
ஒரு சிறிய உதவியை செய்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, தம்பட்டம் அடித்து கொள்வோர் மத்தியில், சேவை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, தன்னார்வலர் ஒருவர், பல்லடத்தில், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகித்தது பலரின் பாராட்டையும் பெற்றது.வெயில் தனது உக்கிரத்தை காட்டிக் கொண்டிருந்த மதிய நேரம், பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டில், கார் ஒன்று வந்து நின்றது. உள்ளே இருந்து இறங்கிய நபர் ஒருவர், கார் டிக்கியை திறந்தார். அதில், பெட்டி பெட்டியாக குடிநீர் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. யாரையும் உதவிக்கு அழைக்காமல், களத்தில் இறங்கிய அவர், அவ்வழியாக வந்த பொதுமக்களுக்கு, குடிநீர் பாட்டில்களை இலவசமாக வழங்கினார்.பிரதிபலன் கருதாமல் அவர் செய்து வரும் இந்த உதவியை போட்டோ எடுக்க முயன்ற போது, 'நான் விளம்பரத்துக்காக இதை செய்யவில்லை. சார்... ப்ளீஸ், எனது பெயர் விவரம் உள்ளிட்ட எதையும் கேட்க வேண்டாம்,' என்றும் போட்டோவை தவிர்த்தார். இவர் செய்த உதவியை பார்க்கையில், 'காலத்தினாற் செய்த நன்றி,' என்ற திருக்குறள் நினைவுக்கு வந்தது.