உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பின்தங்கிய மாவட்டங்களில் தொழில்; சிறப்பு சலுகை அளிக்க வேண்டும்

பின்தங்கிய மாவட்டங்களில் தொழில்; சிறப்பு சலுகை அளிக்க வேண்டும்

திருப்பூர் : 'தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் உற்பத்தி தொழில் துவங்கி, வேலை வாய்ப்பு வழங்க ஏதுவாக, புதிய சலுகைகள் வழங்க வேண்டும்' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.திருப்பூர் வந்திருந்த, ஜவுளித்துறை முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், பின்னலாடை ஏற்றுமதியாளர்களை சந்தித்து பேசினார். பாப்பீஸ் ஓட்டலில் நடந்த சந்திப்பில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலாளர் குமார் வரவேற்றார்.நிறுவன தலைவர் சக்திவேல், சங்க தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் தொடர்பாக பேசினர். தொடர்ந்து, தொழில் வளர்ச்சிக்கான கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனு, செயலரிடம் அளிக்கப்பட்டது.குறிப்பாக, ஒடிசா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள், அதிக அளவு மானியம் வழங்கி வருகின்றன. அதேபோல், தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில், உற்பத்தி தொழில் துவங்க மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். இதன் வாயிலாக, வேலை வாய்ப்பு பெருகி, பின்தங்கிய மாவட்ட மக்களின் பொருளாதாரம் மேம்படும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.ஜவுளித்துறை முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பேசுகையில்,''திருப்பூர் கிளஸ்டர், வேலைவாய்ப்பு, புதிய கண்டுபிடிப்பு, உற்பத்தி, ஆராய்ச்சியில் முன்மாதிரியாக திகழ்கிறது. கோரிக்கைகளை பரிசீலித்து, நிறைவேற்ற, தமிழக அரசு கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். கல்வி நிறுவனங்களில், ஜவுளி தொழிலுக்கான புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்படும். திறன் திட்டங்கள், ஜவுளிக்கொள்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற, முழு முயற்சி எடுக்கப்படும்,'' என்றார்.தொடர்ந்து அவர், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சென்று, பின்னலாடை உற்பத்தி படிநிலைகளை பார்வையிட்டு, வடமாநில தொழிலாளர்களிடம் உரையாடினார். தொழில் பாதுகாப்பு, வருவாய் ஈட்டுவது குறித்தும் கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி