| ADDED : ஜூன் 25, 2024 08:36 PM
திருப்பூர்:பின்னலாடை தொழில்துறையினரை சந்திக்க திருப்பூர் வருமாறு, மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஆயத்த ஆடை கண்காட்சி, புதுடில்லியில் உள்ள யசோபூமி கண்காட்சி அரங்கில் நேற்று துவங்கியது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல், சங்க தலைவர் சுப்பிரமணியன், பொதுசெயலாளர் திருக்குமரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கண்காட்சியில் பங்கேற்றனர். கண்காட்சியை, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் திறந்து வைத்தார். அமைச்சரை சந்தித்த, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள், திருப்பூர் பின்னலாடை தொழில் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தனர். விரைவில், திருப்பூருக்கு வருகை தந்து தொழில்துறையினரை சந்திக்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தனர்.இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'ஒட்டுமொத்த திருப்பூர் தொழிலுக்கான கோரிக்கைகளை, அமைச்சரிடம் கடிதமாக அளித்துள்ளோம். திருப்பூர் தொழில்துறையினரை சந்தித்து பேச நேரில் வருமாறு அழைப்பு விடுத்துள்ளோம். நிச்சயம் நேரில் வருவதாக உறுதி அளித்துள்ளார்,' என்றனர்.