உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., வீட்டில் திருட்டு நகை திருடிய கில்லாடிகள்: போலீசார் அதிர்ச்சி

ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., வீட்டில் திருட்டு நகை திருடிய கில்லாடிகள்: போலீசார் அதிர்ச்சி

அவிநாசி:அவிநாசி அருகே ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., வீட்டின் ஜன்னலை உடைத்து நகையை திருடி சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். அவிநாசியில், சேலம் - கோவை பைபாஸ், அவிநாசிலிங்கம் பாளையம் வீதியில் ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., சுப்பிரமணியம், 68. மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். தஞ்சாவூரில் ஏ.டி.எஸ்.பி.,யாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். கடந்த, 3ம் தேதி தனது மாமியார் இறந்ததால் பெருந்துறைக்கு குடும்பத்தினருடன் சென்றார்.இந்நிலையில், நேற்று காலை வாட்ச்மேன், வீட்டின் பின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சுப்பிரமணியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவமனைக்கு சென்றிருந்த சுப்பிரமணியம் உடனே வீட்டுக்கு திரும்பினார்.வீட்டின் பின் ஜன்னலின் ஒரு பகுதியை வெட்டி உடைத்து, உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள் படுக்கையறையில் இருந்த பீரோக்கள், அலமாரிகள் ஆகியவற்றையும் உடைத்து அதிலிருந்து, 5 சவரன் தங்க நகையை திருடி சென்றது தெரிந்தது.அவிநாசி போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் எதிரில் உள்ள திருமண மண்டபத்தில், கடந்த இரண்டு நாட்களாக சுப முகூர்த்த நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்ததால் ஜன்னலை உடைத்த சத்தம் வெளியில் கேட்காமல் போனதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் உட்பட தனிப்படை போலீசார், நகை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.----திருட்டு நடந்த ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., வீடு. உடைக்கப்பட்ட ஜன்னல். அதற்கான பயன்படுத்தப்பட்ட கோடாரி.

பலனளிக்காத துப்பாக்கியுடன் ரோந்து

'பலே' ஆசாமிகள் கைவரிசைதிருப்பூர் மாவட்டத்தில், காங்கயம், உடுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக தொடர்ச்சியாக நடந்து வரும் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் காரணமாக போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்தாலும் திருட்டு, வழிப்பறி தொடர்கிறது.கடந்த, 1ம் தேதி காங்கயத்தில், ஏழு வீடுகளில் கைவரிசை காட்டி, 25 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய், நான்கு பேர் கொண்ட முகமூடி கும்பல் ஆயுதங்களுடன் கொள்ளைடித்தனர். விரட்டி சென்ற ரோந்து போலீசாரையும் தாக்க முயன்றனர். இதனால், டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி., உத்தரவின் பேரில், 300 போலீசார் துப்பாக்கியுடன் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு ரோந்து மேற்கொள்ள ஆரம்பித்து, 3 நாளே ஆன நிலையில், அவிநாசி அருகே மர்ம நபர்கள் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் கைவரிசை காட்டியுள்ளனர். இத்தனைக்கும், அந்த பகுதிக்கு போலீசார் துப்பாக்கியுடன் ரோந்து மேற்கொண்டு திரும்பியுள்ளனர். ரோந்து பணி பெயரளவில் இருப்பதால், சில நாள் கண்காணித்த ஆசாமிகள், தங்கள் கைவரிசையை காட்ட மீண்டும் ஆரம்பித்து விட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை