உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / l நாளுக்கு நாள் அதிகரிக்கும் நுாதன மோசடியால் அச்சம் l உரிய தற்காப்பு நடவடிக்கை திருப்பூருக்கு அவசர அவசியம்!

l நாளுக்கு நாள் அதிகரிக்கும் நுாதன மோசடியால் அச்சம் l உரிய தற்காப்பு நடவடிக்கை திருப்பூருக்கு அவசர அவசியம்!

- நமது நிருபர் -திருப்பூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் உட்பட, உலகம் முழுவதும் பின்னலாடை தயாரித்து அனுப்புகின்றன. இரு தரப்பினரின், சட்ட ரீதியான ஒப்பந்த அடிப்படையில்தான், வர்த்தகம் நடக்கிறது; இருப்பினும், ஏதாவது ஓரிடத்தில் கோட்டைவிடும் போது, ஒட்டுமொத்த நிறுவனமும் ஸ்தம்பித்துவிடுகிறது.ஏற்றுமதி நிறுவனங்கள், ஜவுளி இறக்கு மதி செய்யும் நாடுகளில் உள்ள, வர்த்தக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, அதற்காக ஆடைகளை தயாரித்து ஏற்றுமதி செய்கின்றன. ஆர்டர் விசாரணை துவங்கி, சாம்பிள் ஆடை அனுப்பி ஒப்புதல் பெற்ற பின், புதிய வர்த்தக ஆர்டர் ஒப்பந்தமாகி, உற்பத்தி துவங்குகிறது.பெரும்பாலும், மூன்று மாதங்களுக்குள், ஆடைகள் உற்பத்தியாகி வெளியே அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆர்டர் ஒப்பந்தமானதும், அந்த சான்றிதழ்களை கொண்டு, வங்கிகளும் ஏற்றுமதியாளருக்கு தாராள கடனுதவி அளிக்கின்றன.'ஜாப் ஒர்க்' நிறுவனங்களும், மூன்று மாத அவகாசத்துடன் பணிகளை செய்து கொடுக்கின்றன. ஆர்டர் மீதான பண பரிவர்த்தனை, இருநாடுகளின் சுங்கத்துறை சரிபார்ப்புக்கு பின்னரே, வங்கிகள் வாயிலாக நடக்கின்றன. அதன்பின், உற்பத்தி செலவு, வங்கிக்கடன் சரிக்கட்டப்படுகிறது.

நம்பிக்கை நாணயம்

வர்த்தக நிறுவனங்கள் அல்லது வர்த்தக முகமைகள் வாயிலாக, ஏற்றுமதியாளர்கள் ஆர்டர் பெறுகின்றனர். வழக்கமான பரிவர்த்தனை என்பதால், நம்பிக்கை அடிப்படையில் ஆர்டர் மீதான உற்பத்தியை துவக்குகின்றனர். சரக்கை அனுப்பியும் வைக்கின்றனர். அதற்குப் பின், அனுப்பிய சரக்குகளுக்கான பணம் கிடைக்காமல் பாதித்த சம்பவங்களும் நடந்துள்ளன.சட்ட ரீதியான ஒப்பந்த ஆவணங்கள் தயாரித்திருந்தால், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் தலையிட்டு, பணத்தை மீட்டுத்தருகிறது. மற்ற சங்கங்கள், திருப்பூர் ஆர்பிட்ரேஷன் கவுன்சிலை நாடி தீர்வு பெறுகின்றன. இத்தகைய பாதிப்புகளில் இருந்து தப்ப, ஏற்றுமதி காப்பீடு கழகம் (இ.சி.ஜி.சி.,) என்ற அமைப்பை மத்திய அரசு இயக்கி வருகிறது.

இ.சி.ஜி.சி., காப்பீடு

ஏற்றுமதி ஆர்டர் ஒப்பந்தமானதும், உரிய சந்தாவை செலுத்தி காப்பீடு செய்து கொண்டால், பண பரிவர்த்தனை வரை, காப்பீடு கிடைக்கும்; ஏதாவது, பாதிப்பு நிகழ்ந்தாலும், அதற்கான இழப்பீட்டை ஏற்றுமதியாளர் பெற முடியும். இருப்பினும், வீண் செலவு என்று கருதும் ஏற்று மதியாளர், எவ்வித காப்பீடும் செய்யாமலேயே, வர்த்தகம் செய்தும் வருகின்றனர்.மத்திய அரசிடம், 'ரீ பண்ட்' வாங்கி கொடுப்பதாக கூறி, ஏற்றுமதியாளர்களிடம் பணமோசடி நடந்துள்ளது. அனுப்பிய சரக்கிற்கான பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்த கதைகளும் ஏராளம் உள்ளது. இதன் தொடர்ச்சியாக, நுாதன முறையில் போலியான வர்த்தக முகமைகள், ஏற்றுமதியாளர்களை வஞ்சிக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியடைய வைத்துள்ளன.திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, புதிய ஆர்டர் கொடுப்பதாக கூறி, இடைத்தரகு வேலை பார்க்கும் முகமைகள், போலியான ஆர்டர் தயாரித்து கொடுத்து, 5 சதவீதம் வரை கமிஷன் பெற்றுக்கொள்கின்றனர். ஆர்டர் கிடைத்த மகிழ்ச்சியில், வங்கியில் கடன் பெற்று, ஜாப்ஒர்க் நிறுவனங்களிடம் கடனுக்கு சேவைகளை பெற்று, பின்னலாடை தயாரிக்கப்படுகின்றன.

நிலைகுலையும் நிறுவனம்

அதற்கு பின்னரே, மோசடி என்பது தெரிய வருகிறது. இருப்பினும், பல லட்சக்கணக்கான மதிப்பில் தயாரித்த ஆடைகளை என்ன செய்வது என்ற கேள்வி வேதனையாக மாறியுள்ளது. வங்கிகளுக்கு, உரிய தவணையில் கடனை செலுத்தியாக வேண்டும். 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களுக்கும், சேவை கட்டணத்தை செலுத்த வேண்டும்.ஆடைகளை உள்ளூர் சந்தைக்கு மாற்றினால், 50 சதவீத விலையில் கேட்கவே ஆளில்லை. இதுபோன்ற சிக்கலான மோசடி வலையில், திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களும் விழுகின்றன. இதனால், நீண்ட நாள் உழைப்பு வீணாக, அடுத்தகட்ட வளர்ச்சியும் முடக்கப்படுவதாக வேதனை பரவியுள்ளது.தகுந்த காப்பீடு அம்சங்களை பின்பற்றியே ஆக வேண்டிய கட்டாயம் திருப்பூருக்கு உருவாகியுள்ளது. தொழில் காக்கும் சங்கங்கள், தங்களது உறுப்பினர்களின் வேதனையை குறைக்கவும், தற்காக்கவும் தகுந்த வழிமுறைகளையும், ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்!

விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு சங்கத்தின் சார்பில், தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மோசடி வலையில் சிக்காமல், பாதுகாப்பாக வர்த்தகம் செய்வது முக்கியம். சட்ட ஆவணங்களை முறையாக தயாரித்து அதனை பின்பற்ற வேண்டும். சில மாதங்களாக, போலியான வர்த்தக முகமைகள், தவறான ஆவணங்களை தயாரித்து, ஏற்றுமதியாளரை ஏமாற்றுகின்றன. இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.- சுப்பிரமணியன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர்

நுாதன மோசடி 'அலர்ட்'

ஏற்றுமதி வர்த்தகம் மந்தமாக இருப்பதால், ஆர்டர் கிடைத்தால் போதும் என்று தொழில்துறையினர் கருதுகின்றனர். இதனை பயன்படுத்தி, நுாதன முறையில் மோசடி செய்கின்றனர். போலியான வர்த்தக முகமைக்கு, குறைவான அளவு மட்டும்தான் கமிஷன் கிடைக்கும். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ஏற்படும் பாதிப்பை அளவிட முடியாது; அடுத்தகட்ட வளர்ச்சியும் பாதிக்கும். வர்த்தக முகமையாக இருந்தாலும், வர்த்தக நிறுவனமாக இருந்தாலும், நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்து, ஆன்லைன் மூலம் சரிபார்த்த பிறகே, வர்த்தகத்தை உறுதி செய்ய வேண்டும்.- சபரி கிரிஷ்,ஏற்றுமதி வர்த்தக ஆலோசகர்

நம்பகத்தன்மையை சரிபாருங்க!

திருப்பூரில் பெரும்பாலான ஏற்றுமதி நிறுவனங்கள், முகமைகள் வாயிலாக வர்த்தக வாய்ப்புகளை பெறுகின்றனர். வர்த்தக நிறுவனம் குறித்தும், அவர்களின் முகமைகள் குறித்து தெளிவான தரவுகளை பெற்று அதனை சரிபார்த்து கொள்வது மிகவும் அவசியம். ஏற்றுமதி வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கும் முன்னதாக, சம்பந்தப்பட்ட வர்த்தக அமைப்பு தொடர்பாக தெளிவாக விசாரிக்க வேண்டும். அந்நிறுவனத்தின் மீது நம்பகத்தன்மை இல்லாதபட்சத்தில், 'அபாட்' அமைப்பை அணுகினால், தேவையான உதவிகளும், ஆலோசனைகளும் வழங்க தயாராக இருக்கிறோம்.- இளங்கோவன், அனைத்து ஜவுளிஏற்றுமதி முகமைகள் கூட்டமைப்பு (அபாட்) தலைவர்இதுபோன்ற சிக்கலான மோசடி வலையில், திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களும் விழுகின்றன. இதனால், நீண்ட நாள் உழைப்பு வீணாக, அடுத்தகட்ட வளர்ச்சியும் முடக்கப்படுவதாக வேதனை பரவியுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை