தலைமைத்துவம்: மாணவியருக்கு உதவும் கல்லுாரிப் பேரவை
திருப்பூர்:''ஆளுமைப்பண்பையும், தலைமைத்துவத்தையும் மாணவியர் பெறுவதற்கு, கல்லுாரி பேரவை உதவும்; உள்ளாட்சிகள் உள்ளிட்டவற்றில், 50 சதவீத இட ஒதுக்கீடு, மகளிருக்கு அமலாகியுள்ளது.எதிர்காலத்தை நாட்டை வழிநடத்துவதில், மகளிரின் பங்களிப்பே அதிகமாக இருக்கும். அதற்காக மாணவியராகிய நாங்கள் தற்போதே தயாராகிறோம்''திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில், கல்லுாரி பேரவை துவக்க விழாவில் பங்கேற்ற மாணவியர் கூறிய வார்த்தைகள் இவை. நேற்று நடந்த விழாவுக்கு, கல்லுாரி முதல்வர் தமிழ்மலர் தலைமை வகித்தார். கல்லுாரி பேரவையை எம்.எல்.ஏ., செல்வராஜூம், கல்லுாரி மன்றங்களை மேயர் தினேஷ்குமாரும் துவக்கிவைத்தனர்.கோவை அரசு கலைக்கல்லுாரி முதல்வர் எழிலி பேசினார். கல்லுாரி பேரவை தலைவராக பாஹிதா, துணை தலைவராக ஜெசிதா பேபி, செயலாளராக பிருந்தா, பொருளாளர்களாக யோகேஸ்வரி, உஷா அபிநயா, விளையாட்டு செயலராக முத்துமணி, கலைப்பிரிவு செயலராக கிருத்திகா மற்றும் 17 துறை செயலர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். முன்னதாக, கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. பாஹிதா, பேரவை தலைவர்:
நுாற்றுக்கணக்கான மாணவியரை ஒருங்கிணைத்து, வழிநடத்தும் போது, ஆளுமைப்பண்பு வளரும்; மாணவியர், தங்களிடம் உள்ள குறைகளை, தங்களுக்குள்ளேயே பேசிக் கொள்வதால், எந்த தீர்வும் கிடைத்துவிடாது. குறைகளை, ஆசிரியர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லும் போது தீர்வு கிடைக்கும். மாணவியருக்கும், நிர்வாகத்துக்கும் பாலமாக செயல்படுவோம். பிருந்தா, பேரவை செயலர்:
மாணவியரின் பிரச்னைகள், சந்தேகங்களை ஆசிரியர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று, தீர்வு ஏற்படுத்தி கொடுக்க முயற்சி செய்வேன். ஒவ்வொரு மாணவியரும் கல்வியில் சிறந்து விளங்கவும், தங்களின் திறமையை வளர்த்துக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு செயல்படுவேன். முத்துமணி, விளையாட்டு செயலர்:
விளையாட்டில் திறமை, ஆர்வமுள்ள ஏராளமான மாணவியர் கல்லுாரியில் ஏற்கனவே உள்ளனர். அவர்களின் திறமையை மெருகேற்றுவதற்கான வழிவகையை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்வோம். முதல்வர் கோப்பை உள்ளிட்ட மாவட்ட, மாநில அளவிலான போட்டியில், மாணவியரை பங்கேற்க செய்ய முயற்சி மேற்கொள்வோம். இந்த பொறுப்பு, வாழ்க்கை பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறது. கிருத்திகா,கலைப்பிரிவு செயலர்:
கலைத்துறையில், மாணவியர் தங்களின் திறமையை தங்களுக்குள் முடக்கி வைக்காமல், அதை வெளிக்கொணரும் வகையிலான ஊக்குவிப்பை வழங்குவோம். மாணவியர் மத்தியில் உள்ள தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிய செய்து, அவர்களின் திறமையை வெளியுலகிற்கு கொண்டு வருவதற்கானஏற்பாடுகளை செய்வோம்.