திருப்பூர்:தற்காலிக இடமாற்றம் செய்யப்படும் எம்.ஜி.ஆர்., சிலையை, மீண்டும் அதே இடத்தில் நிறுவலாம் என, கலெக்டர் முன்னிலையில் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.திருப்பூரில், நொய்யல் ஆற்றோர ரோட்டில், குமரன் ரோட்டின் குறுக்கே, சுரங்கபாலம் அமைக்கும் பணி, நீண்ட இடைவெளிக்கு பிறகு நடந்து வருகிறது. அங்குள்ள, எம்.ஜி.ஆர்., சிலையை தற்காலிகமாக இடமாற்றம் செய்து, பின், அதே இடத்தில் சிலையை வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ., விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர் கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பணிகளுக்காக, சிலையை தற்காலிகமாக அகற்றுவது; பணி நிறைவு பெற்றதும், மீண்டும் அதே இடத்தில் சிலையை வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதற்கான தீர்மானம் நிறைவேற்றி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரமேஷ்கண்ணா, உதவி கோட்ட பொறியாளர் விஜயகுமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அம்சராஜ், நகர திட்ட அலுவலர் இளங்கோவன் உள்ளிட்டோர் பரிந்துரைத்தனர். உடன்படிக்கையில், கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் கையொப்பமிட்டனர். பணி நடக்கும் வரை, கட்சியினர் விரும்பும் வகையில், சிலையை பத்திரமாக வைத்திருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. கட்சியினர் வேண்டுகோளை ஏற்று, உடன்படிக்கை நகல், அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கும் வழங்கப்பட்டது.---எம்.ஜி.ஆர்., சிலை---எம்.ஜி.ஆர்., சிலை இடமாற்றம் தொடர்பாக, அ.தி.மு.க.,வினர் - அதிகாரிகள் இடையேயான உடன்படிக்கை.