மேலும் செய்திகள்
நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சேவை துவக்கம்
31-Aug-2024
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்துக்கு, ஏழு நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்த வாகனங்கள் நேற்றுமுதல் இயக்கத்தை துவக்கியுள்ளன. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். அமைச்சர் சாமிநாதன், கால்நடை மருத்துவ வாகன இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்தபின் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், முதல்கட்டமாக திருப்பூருக்கு 2; தாராபுரத்துக்கு 3; உடுமலைக்கு 2 என, ஏழு நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் வந்துள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும், உதவி கால்நடை மருத்துவர் மற்றும் உதவியாளர்கள் பணியில் இருப்பர்.கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இந்த வாகனங்களில் உள்ளன. கால்நடை மருந்தகங்கள் இல்லாத கிராமங்களுக்கு சென்று, மருத்துவ சேவைகளை வழங்க உள்ளன. கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி செலுத்துதல், நோய் பாதித்த கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள், காலை, 8:00 முதல் மதியம், 2:00 மணி வரை, குறிப்பிட்ட வழித்தடங்களில் சென்று கால்நடை களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும். அவசர காலங்களில் அழைப்பதற்காக 1962 என்கிற தொடர்பு எண் வசதியும் உள்ளது. அழைப்பின்பேரில், குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். கால்நடை வளர்ப்பாளர்கள், இந்த வாகன சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார். டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் புகழேந்தி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
31-Aug-2024