வாராந்திர ரயிலுக்கு அதிக வரவேற்பு; வாரம் முழுவதும் இயக்க எதிர்பார்ப்பு
உடுமலை : துாத்துக்குடி வாராந்திர ரயில் மற்றும் திருநெல்வேலி சிறப்பு ரயிலை வாரம் முழுவதும் இயக்க வேண்டும் என உடுமலை பகுதியை சேர்ந்த பயணியர் ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக துாத்துக்குடிக்கு வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வருகிறது.துாத்துக்குடியில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமை இரவு, 10:50 மணிக்கு, கிளம்பும் விரைவு ரயில், வெள்ளிக்கிழமை காலை, 7:15 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடைகிறது; மறுமார்க்கமாக வெள்ளிக்கிழமை, 8:00 மணிக்கு, மேட்டுப்பாளையத்தில் இருந்து துாத்துக்குடிக்கு இந்த ரயில் செல்கிறது.கோவை, பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதியில் இருந்து பிரசித்தி பெற்ற கோவில்கள் மற்றும் வியாபார தேவைக்காக துாத்துக்குடிக்கு அதிகளவு மக்கள் செல்கின்றனர். இதனால், இந்த ரயிலுக்கு அதிக வரவேற்பு உள்ளது.இந்த வாராந்திர ரயிலை வாரம் முழுவதும் இயக்கினால், பயனுள்ளதாக இருக்கும் என பயணியர் தெரிவிக்கின்றனர். இதே போல், திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயிலுக்கும் அதிக வரவேற்பு உள்ளது.இந்த ரயிலை சாதாரண ரயிலாக மாற்றி, அனைத்து நாட்களும் இயக்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது குறித்து, ரயில்வே நிர்வாகத்துக்கும் உடுமலை பகுதி பயணியர் சார்பில், கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.