நமக்கு ஓணம் ஆகோஷிக்காம்... குமரன் கல்லுாரியில் மாணவியர் குதுாகலம்
திருப்பூர்: ஓணம் பண்டிகையை வரவேற்கும் விதமாக, திருப்பூர் குமரன் கல்லுாரியில் மாணவியர் உற்சாகத்துடன் விழா நடத்தினர்.கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை (15ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வழக்கமாக கொண்டாடப்படும். மலையாள மக்கள் அதிகளவில் வசிக்கும் திருப்பூரிலும் ஓணம் பண்டிகை ஆண்டு தோறும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது வழக்கம்.ஓணம் பண்டிகையை வரவேற்கும் விதமாக, மங்கலம் ரோட்டிலுள்ள திருப்பூர் குமரன் கல்லுாரியில் நேற்று மாணவியர் சார்பில் விழா நடந்தது. ஏராளமான மாணவியர் கேரள பாரம்பரியமான சேலையை அணிந்து வந்து பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் வசந்தா குத்து விளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தார். நிர்வாக அலுவலர் நிர்மல்குமார், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.கல்லுாரி வளாகத்தில், ஓணம் பண்டிகையின் சிறப்பான அத்தப்பூ கோலம் வரைந்து மாணவியர் தங்கள் கலையுணர்வை வெளிப்படுத்தினர். கோலத்தைச் சுற்றி வந்து மாணவியர் திருவாதிரை நடனமாடினர். கேரளத்தின் பிரபலமான சென்டை மேளம் இசைக்கப்பட்டது.அதற்கேற்ப மாணவியர் ஆங்காங்கே குழுவாக கூடி நடனமாடினர். சில மாணவியர் சென்டை மேளம் அடித்து தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.