பி.ஏ.பி., பாசன நீர் பங்கீட்டு அட்டை பழைய முறை வருமா?மறந்து போன சிறப்பான நடைமுறை
உடுமலை;விளைநிலங்களுக்கான பாசன நீர் பங்கீட்டில் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க, வேளாண் பொறியியல் துறை வாயிலாக, பாசன நீர் பங்கீட்டு அட்டை வினியோகிக்கும் முறையை மீண்டும் செயல்படுத்த, பி.ஏ.பி., விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.பி.ஏ.பி., பாசனத்துக்கு திருமூர்த்தி அணையிலிருந்து, மண்டலம் வாரியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நடைமுறையால், விளைநிலங்களுக்கு பாசன நீர் கிடைக்க இரண்டு ஆண்டுகள் இடைவெளி ஏற்படுகிறது.இதனால், மண்டல பாசன காலத்தில், மடை வாயிலாக மேற்கொள்ளப்படும் நீர் நிர்வாகத்தில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகிறது. ஏக்கருக்கு சில மணி நேரம் மட்டுமே கிடைக்கும் பாசன நீரும் கிடைக்காமல், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கின்றனர்.பி.ஏ.பி.,யில், பிரதான, கிளை, பகிர்மான கால்வாய்களில், தண்ணீர் திறக்கப்பட்டு, விளைநிலங்களின் பரப்பு அடிப்படையில், மடைகள் வாயிலாக நீர் நிர்வாகம் பின்பற்றப்படுகிறது.ஒவ்வொரு மண்டல பாசனத்தின் போதும், பாசன சபை மற்றும் நீர்வளத்துறையினர் நீர் நிர்வாகம் தொடர்பான பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்கின்றனர்.தற்போது இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பாசன பகுதியில் போதிய மழை இல்லாததால், நீர் நிர்வாகம் குறித்த பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது.பாசன கால்வாயில் செல்லும் தண்ணீரை ஆங்காங்கே, குழாய் பொருத்தி அத்துமீறி எடுப்பதால், கடைமடை பகுதிகளுக்கு நிர்ணயித்த அளவில் நீர் சென்றடைவதில்லை. இதுனால், நீர் நிர்வாகத்தில் பெரும் சவாலும், சிக்கலும் ஏற்படுகிறது. மறந்த நடைமுறை
பி.ஏ.பி.,யில், நீர் நிர்வாகத்தை முறையாக செயல்படுத்த, தமிழக அரசு வேளாண் பொறியியல் துறை வாயிலாக, விவசாயிகளுக்கு பாசன நீர் பங்கீட்டு அட்டை வழங்கப்பட்டது.அந்த அட்டையில், பாசன சபை பெயர், கோட்டம், மண்டலம், கால்வாய், கிளை கால்வாய், பாசன பரப்பு, பாசன முறை காலம், அடிப்படை நேரம், கிராமம், தாலுகா உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இடம் பெற்றிருக்கும்.குறிப்பாக, விளைநிலங்களுக்கு, ஏக்கர் அடிப்படையில், எத்தனை மணி நேரம்; எவ்வளவு நிமிடம் தண்ணீர் வழங்கப்படும் என துல்லியமாக நீர் பங்கீட்டு விபரங்கள் இடம் பெற்றிருந்தது.இதனால், பாசனத்தின் போது பிரச்னைகள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட பாசன சபையினர் மற்றும் நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க எளிதாக இருந்தது. ஒவ்வொரு மடையிலும், பாசன நிலங்கள், தொழிற்சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளது.அதே வேளையில், மடை மற்றும் இதர விபரங்களை மறு சீரமைப்பு செய்வது அவசியமாகியுள்ளது. புத்துயிர் பெருமா?
இது குறித்து, விருகல்பட்டி கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க ஆட்சி மண்டல குழு உறுப்பினர் ஸ்ரீதர் கூறுகையில், ''பி.ஏ.பி.,யில், விளைநிலங்களுக்கான நீர் பங்கீட்டு முறைக்கு, பாசன நீர் பங்கீட்டு அட்டை முக்கிய ஆவணமாக இருந்தது. ஆனால், இந்த நடைமுறை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கைவிடப்பட்டது.தற்போது இத்தகைய விபரங்கள் முறையாக இல்லாமல், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, தமிழக அரசு, பி.ஏ.பி., பாசன பகுதி முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பாசன நீர் பங்கீட்டு அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், நீர் நிர்வாக பிரச்னைகளுக்கு எளிதாக தீர்வு கிடைக்கும்,'' என்றார்.பி.ஏ.பி.,யில், கால்வாய் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்காக சர்வே நடைபெற்று வரும் நிலையில், பாசன நீர் பங்கீட்டு அட்டை குறித்த விவசாயிகள் கோரிக்கையையும் அரசு பரிசீலிக்க வேண்டியது அவசியமாகும்.