பாசன ஆதாரங்களில் குவியும் பிளாஸ்டிக் கழிவு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தேவை
உடுமலை;பாசன ஆதாரங்களான அணைகளில், பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து, நீர் மாசடையும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் துறைகளை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், திருமூர்த்தி மற்றும் அமராவதி அணை அமைந்துள்ளது. இந்த இரு அணைகள் வாயிலாக, பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.மேலும், மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக இந்த இரு அணைகளும் உள்ளன. குறிப்பாக, திருமூர்த்தி அணை, அமணலிங்கேஸ்வரர் கோவில், பஞ்சலிங்க அருவி ஒரே இடத்தில், அமைந்துள்ளதால், ஆன்மிக மற்றும் சுற்றுலா தலமாக உள்ளது.வனத்தின் எல்லையிலுள்ள இப்பகுதி சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா வருபவர்கள், திருமூர்த்தி அணை உட்பட அனைத்து இடங்களிலும், பல்வேறு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்துகின்றனர்.குறிப்பாக அணைக்கரை உள்ளிட்ட இடங்களில், உணவு அருந்தி விட்டு, அனைத்து வகையான பிளாஸ்டிக்கழிவுகளை வீசி எறிகின்றனர். இவ்வாறு, வீசப்படும் கழிவுகளை, முறையாக எத்துறையினரும் அப்புறப்படுத்துவதில்லை.இதனால், அணை நீரிலும், அருவியில் இருந்து வரும் சிறிய ஆற்றிலும், கழிவுகள் தேங்கி, நீர் மாசடைகிறது. அணையின் மறுகரையில் வனவிலங்குகள், தண்ணீர் அருந்துவதால், அவைகளும் பாதிக்கும் அபாயம் உள்ளது.பாசன கால்வாய்களிலும், இந்த கழிவுகள் அடித்து செல்லப்பட்டு, விளைநிலங்களில், தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது.எனவே, திருமூர்த்திமலையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த, பொதுப்பணித்துறை, வனத்துறை, தளி பேரூராட்சி, ஹிந்து அறநிலையத்துறை உட்பட துறையினரை ஒருங்கிணைந்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதே போல், அமராவதி அணை பூங்காவும், பிளாஸ்டிக் கழிவுகளின் கிடங்காக மாறி வருகிறது. அருகிலேயே வனப்பகுதி, இருந்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த, பகுதியில், மாசை கட்டுப்படுத்த, தன்னார்வ அமைப்பினர், அவ்வப்போது, பிளாஸ்டிக் கழிவுகளை முன்பு அகற்றினர். தற்போது இந்த நடைமுறையும் கைவிடப்பட்டுள்ளது.