போலீஸ் குவிப்பு; ஊத்துக்குளியில் பரபரப்பு
திருப்பூர்; ஆடுகள் பலி தொடர்கதையாக இருப்பதால், ஊத்துக்குளியில் அமைச்சர் பங்கேற்ற விழாவின்போது, நுாற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில், காங்கயம், வெள்ளகோவில், ஊதியூர், ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய தோட்டங்களில் பட்டியில் வளர்க்கப்படும் ஆடுகளை தெருநாய்கள் வேட்டையாடுவது தொடர்கதையாக உள்ளது. இதற்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.சமீபத்தில் காங்கயத்தில் இறந்த ஆடுகளுடன் விவசாயிகள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரால் கைது செய்யப்படும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விவசாயிகளிடம் போலீசார் அடாவடியாக நடந்து கொண்டது தொடர்பாக வீடியோக்களும் வெளியாயின.அமைச்சர் சாமிநாதன் தொகுதியான காங்கயத்தில் ஆடுகள் இறப்புக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டுமென நடக்கும் போராட்டத்தின் எதிரொலியாக அமைச்சர் தரப்பில் இறந்த ஆடுகளுக்கான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.இந்நிலையில், முதல்வர் மருந்தகங்கள் தமிழகத்தில் நேற்று திறக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ஊத்துக்குளியில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு விழா நடந்தது. அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னதாக, ஊத்துக்குளி, கஸ்துாரிபாளையத்தில் விவசாயி ராமசாமி, 62 என்பவரின் தோட்டத்து பட்டியில் அடைக்கப்பட்டிருந்த, 50 ஆடுகளில், ஒன்பது ஆட்டு குட்டிகளை நாய்கள் கடித்து குதறியது. சில ஆடுகளுக்கு காயம் ஏற்பட்டது காலையில் தெரிய வந்தது.இதையறிந்த போலீசார், திறப்பு விழாவுக்கு வரக்கூடிய அமைச்சரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக நினைத்து, நுாற்றுக்கணக்கான போலீசாரை குவித்தனர். வாகன தணிக்கை உள்ளிட்டவை மேற்கொண்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், அமைச்சர் விழாவின் போது விவசாயிகள் திரளவோ, போராட்டம் நடத்தவோ இல்லை.