குளங்களிலும் வருவாய் ஈட்ட வழியுண்டு! கைகொடுக்கும் தாமரை கிழங்கு
உடுமலை : மருத்துவ குணங்கள் நிறைந்த தாமரை கிழங்குகளை செட்டிக்குளத்தில், அறுவடை செய்து தொழிலாளர்கள் வருவாய் ஈட்டி வருகின்றனர். அனைத்து குளங்களிலும் தாமரை வளர்க்க இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை ஏழு குள பாசனத்திட்டத்தில், செங்குளம், பெரியகுளம், தினைக்குளம் உட்பட குளங்கள் அமைந்துள்ளன.இதில், பள்ளபாளையத்தில், அமைந்துள்ள செட்டிக்குளத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளால், தாமரை விதைகள் துாவிவிடப்பட்டன. தற்போது குளத்தில் பரவலாக தாமரைச்செடிகள் பரவி காணப்படுகிறது.பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு, பருவமழை குறைவு உட்பட காரணங்களால், அக்குளத்தில் தண்ணீர் இருப்பு குறைந்து, வருகிறது.இதையடுத்து, குளத்தில், தாமரை கிழங்குகளை சேகரிக்க, அப்பகுதி மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சர்க்கரை நோய், சிறுநீரகக்கோளாறு, மூட்டுவலி போன்றவற்றுக்கு மருந்தாகவும், கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்துக்கும் இந்த கிழங்குகள், சித்த மருத்துவத்தில், பயன்படுத்தப்படுகின்றன.இவ்வாறு பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த கிழங்குகளை, குளங்களில் தோண்டி எடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த கிழங்குகளை எடுத்துச்சென்று விற்பனை செய்வதால் கணிசமான வருமானம் கிடைக்கிறது.உடுமலையிலுள்ள பெரும்பாலான குளங்களில் ஆகாயத்தாமரைகள், முள்செடிகள் உட்பட பல்வேறு களைச்செடிகளே நிறைந்து காணப்படும் நிலையில், செட்டிக் குளத்தில் மட்டுமே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத, அதே நேரத்தில் மக்களுக்கு பயன்படும் தாமரை செடிகள் காணப்படுகிறது. தாமரை கிழங்குகள் மட்டுமில்லாமல், இலை மற்றும் தாமரை பூக்களும் பல்வேறு வர்த்தக பயன்படுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.பல இடங்களில் தாமரைகள் வர்த்தக நோக்கில் வளர்க்கப்பட்டு அதன் கிழங்கு, இலை மற்றும் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அதேபோன்று பெரியகுளம், செங்குளம், ஒட்டுக்குளம், தினைக்குளம் போன்று அனைத்து குளங்களிலும், தாமரை விதைகளை துாவிவிட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அப்பகுதி மக்கள் கூறுகையில், 'தாமரை கிழங்கை, கிலோ, 30 ரூபாய் வரை, சில வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். கேரளா போன்ற பகுதிகளில் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவதால் அங்கு இக்கிழங்குகளுக்கு வரவேற்பு அதிகமுள்ளது,' என்றனர். தேவை நடவடிக்கை!
உடுமலை சுற்றுப்பகுதியில் பெரியகுளம், 404 ஏக்கர், செங்குளம், 74.84; ஒட்டுக்குளம், 90; செட்டிகுளம், 67.49; தினைக்குளம், 51.19; கரிசல்குளம், 31.22; அம்மாபட்டி குளம், 31.22 ஏக்கர், வலையபாளையம் குளம், 52.80 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.இவற்றில், ஆண்டு முழுவதும் நீர் இருக்கும் நிலையில், தாமரை, அல்லி போன்ற, நீர் வாழ் தாவரங்களின் விதைகளை துாவினால், குளத்தின் நீர் மாசுபடுவது தடுக்கப்படுவதோடு, நீர் வாழ் பறவைகள், உயிரினங்களுக்கும் ஆதாரமாகவும், அழகாகவும் காணப்படும்.குளங்களில், வணிக அடிப்படையில், தாமரை சாகுபடி செய்யப்படும் போது, சுற்றுப்புற கிராம மக்களுக்கு வருவாய் அளிக்கும் வகையில் குளங்கள் பயன்படும்.எனவே, செட்டி குளம் போல், அனைத்து குளம், குட்டைகளிலும் தாமரை விதைகள் துாவ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.