உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பூண்டி கோவில் தேரோட்டம் கோலாகலம்

பூண்டி கோவில் தேரோட்டம் கோலாகலம்

அவிநாசி : திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில் தேரோட்டம் நேற்று பக்தர் வடம் பிடித்து இழுக்க விமரிசையாக நடந்தது.திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலில், மாசி மகத் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. தேரோட்ட நாளான நேற்று முன்தினம், மாலை நல்ல மழை பெய்ததால், சில அடி துாரம் சென்ற தேர் நிறுத்தப்பட்டது. மீண்டும் தேரோட்டம், நேற்று காலை துவங்கியது. முன்னதாக விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சண்முகநாதர் வள்ளி தெய்வானை சமதேரராக எழுந்தருளிய பெரிய தேர் வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர்.திரண்டிருந்த பக்தர்கள் 'சண்முகநாதருக்கு அரோகரா' என்று கோஷமிட்டவாறு வடம் பிடித்து இழுத்தனர். ரத வீதிகள் வழியாக வலம் வந்த தேர்கள் பிற்பகலுக்கு மேல் நிலை சேர்ந்தது. விழாவில், இன்று, பரிவேட்டை, குதிரை மற்றும் சிம்ம வாகனங்கள் மீதமர்ந்து உற்சவர் காட்சி அளித்து அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும், தெப்பத் திருவிழா ஆகியன நடைபெறவுள்ளது.

முன்னேற்பாடு இல்லைபக்தர்கள் கடும் அவதி

தேரோட்டத்தை முன்னிட்டு அதிகளவு பக்தர்கள் வருவர் என்ற நிலையிலும், உரிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதில் கோவில் நிர்வாகம் சார்பில் எந்தவிதமான முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை. வெயில் கொளுத்திய நிலையில், பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்டவை வழங்க கூட எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. தேர்கள் வலம் வரும் வழியில், பக்தர்கள் சிவனடியார்கள், சிவபுராணம் உட்பட பாடல்களைப் பாடியபடியும், சிவகண பூத வாத்தியங்களை இசைத்தவாறும் சென்றனர். தேர்கள் பிரதான ரோட்டில் வரும் போது போக்குவரத்து போலீசார் அந்த ரோட்டில், வாகனப் போக்குவரத்தை சீரமைக்கும் பணியை திட்டமிட்டு மேற்கொள்ளவில்லை. நான்கு புறங்களிலும் வாகனங்கள் திரண்டு வர போக்குவரத்து நெருக்கடி நீண்ட நேரம் நீடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி