பொதுத்தேர்வுகளை திறம்பட நடத்த ஆயத்தம்
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட தேர்வு குழு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்து பேசியதாவது: திருப்பூர் மாவட்டத்தில், 92 தேர்வு மையங்களில் நடைபெறும் பிளஸ் 1 பொதுத்தேர்வை, 221 பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் மற்றும் தனித்தேர்வர்கள், மொத்தம் 27 ஆயிரத்து 565 பேர் எழுதுகின்றனர். 92 மையங்களில் நடைபெறும் பிளஸ்2 பொதுத்தேர்வை, 217 மேல்நிலை பள்ளிகளில் படிக்கும், 25 ஆயிரத்து 863 மாணவ, மாணவியர் மற்றும் 379 தனித்தேர்வர்கள் என, மொத்தம் 26 ஆயிரத்து 242 பேர் எழுத உள்ளனர். 108 மையங்களில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 348 பள்ளிகளில் படிக்கும் 30 ஆயிரத்து 235 மாணவ, மாணவியர் மற்றும் 1097 தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 31 ஆயிரத்து 332 பேர் எழுத உள்ளனர்.பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக, மாவட்டத்தில் நான்கு இடங்களில் வினாத்தாள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேல்நிலை பொதுத்தேர்வு மையங்களில், தலைமை ஆசிரியர்கள் 92 பேர், துறை சார்ந்த அலுவலர்கள் 92 பேர் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும்; 1570 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாக பணிபுரிய நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளராக பணிபுரிய 108 தலைமை ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களும்; அறை கண்காணிப்பாளராக பணிபுரிய ஆசிரியர்கள் 1,780 பேரும் நியமிக்கப்படுகின்றனர்.தேர்வில் காப்பியடிப்பது உள்பட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை கண்காணிப்பதற்காக, மேல்நிலை பொதுத்தேர்வுக்கு 150 ஆசிரியர்கள் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 170 ஆசிரியர்களை கொண்ட பறக்கும்படையும் அமைக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.முதன்மை கல்விஅலுவலர் உதயகுமார் மற்றும் மாவட்ட தேர்வுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.