பல்லடம், ; கடந்த, 12 ஆண்டுகளாகியும் நல வாரியம் செயல்பாட்டுக்கு வராதது, கிராம கோவில் பூசாரிகள், அர்ச்சகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து கிராம கோவில் பூசாரிகள் நலச் சங்க மாநில தலைவர் வாசு கூறியதாவது:ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களில் பணியாற்றும் கிராம கோவில் பூசாரிகள், அர்ச்சகர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கடந்த, 2001ல் கிராம கோவில் பூசாரிகள் நல வாரியம் துவங்கப்பட்டது.அறநிலையத்துறை நிதித்துறை உட்பட, 9 அலுவல் சாரா உறுப்பினர்களும் இதற்காக நியமிக்கப்பட்டனர். நாளடைவில் மாயமான நலவாரியம், 2011ல் மீண்டும் புத்துயிர் பெற்றது. சில மாதங்களை செயல்பாட்டில் இருந்த நலவாரியம், மீண்டும் மூடு விழா செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த, 12 ஆண்டுகளாக நலவாரியம் செயல்படாமல் உள்ளது.பல்வேறு துறை சார்ந்த தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு நலவாரியம் உள்ளது போல், ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட பூசாரிகளை உள்ளடக்கிய குடும்பங்கள் பயன்பெறும் வகையில், நல வாரியம் அமைத்து தர வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.கடந்த ஆட்சிக் காலத்திலும் நல வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் செயல்படுத்தப்படவில்லை. தற்போது ஆளும் கட்சியாக உள்ள தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தும், நலவாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.இதனால், வருவாய் இன்றி தவித்து வரும் பல லட்சம் பூசாரிகள் குடும்பங்கள், தங்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு உதவிகள் கிடைக்க வழியின்றி சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த, 12 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் நிறைவேறாதது, கிராம கோவில் பூசாரிகள், அர்ச்சகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. எனவே, மேலும் காலம் தாழ்த்தாமல் நலவாரியத்தை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.