மருத்துவ கவுன்சிலிங்கில் அரசுப்பள்ளி மாணவர்கள்
உடுமலை;அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மருத்துவ கவுன்சிலிங்கில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 34 பேர் பங்கேற்றுள்ளனர்.'நீட்' தேர்ச்சி பெற்றவர்களுக்கான மருத்துவ கவுன்சிலிங், 22ம் தேதி துவங்கியது. சிறப்பு பிரிவு, மாற்றுத்திறனாளிகளை தொடர்ந்து, அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இடஒதுக்கீடு கவுன்சிலிங் நடந்தது. இதில், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, அரசுபள்ளிகளில் படித்த,34 மாணவர்கள் பங்கேற்றனர்.இவர்களில், 22 எம்.பி.பி.எஸ்., படிப்புக்கும், எட்டு பேர் பல் மருத்துவ படிப்புக்கும் விருப்பம் தெரிவித்துள்ளனர். நான்கு பேர் பல் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்து, கிடைக்கவில்லை. இவர்கள் அடுத்த தேர்வாக எம்.பி.பி.எஸ்., சேரலாம். இத்தகவலை மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.