உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேர்த்திருவிழா மேடையில் குத்துப்பாட்டு; ஈஸ்வரன் கோவிலில் முகம் சுளித்த பக்தர்கள்

தேர்த்திருவிழா மேடையில் குத்துப்பாட்டு; ஈஸ்வரன் கோவிலில் முகம் சுளித்த பக்தர்கள்

திருப்பூர் : பாரம்பரியமான தேர்த்திருவிழாவில், இசை நிகழ்ச்சி என்கிற பெயரில் குத்துப்பாடலுடன் ஆட்டம் போட்டது பக்தர்களை முகம் சுளிக்கச் செய்தது.திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவ பெருமாள் கோவில் தேர்த் திருவிழா கடந்த, 17ல் துவங்கி நடைபெற்றது. தினமும் மாலை, வழக்கம்போல், பெருமாள் கோவில் வளாகத்தில் மேடை அமைத்து இசை நிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. வழக்கத்துக்கு மாறாக, 12வது நாளான நேற்றுமுன்தினம், ஈஸ்வரன் கோவில் முன்புறம், ரோட்டில் மேடை அமைத்து, ஆர்க்கெஸ்ட்ரா இரவு, 7:40 மணிக்கு, 'பித்தா பிறைசூடி பெருமாளே' என பக்திபாடலுடன் துவங்கிய இசை நிகழ்ச்சி, மெல்ல சினிமா பக்கம் சென்றது.இசைக்குழுவினரோ, 'உங்களுக்கு வேணும்னா சினிமா பாட்டு பாடுவோம்'; இல்லைனா பக்திபாட்டு மட்டும்தான்' னு அவ்வப்போது சொல்லிக்கொண்டிருந்தனர். திடீரென, 'வெச்சாலும் வைக்காம போனாலும் மல்லிவாசம்' என, சினிமா பாடலுக்கு தாவிவிட்டனர். தொடர்ந்து 'ரஞ்சிதமே.. ரஞ்சிதமே..' 'மதன மாளிகையில்', 'நாங்க வேர்றமாரி' என, அடுத்தடுத்து வரிசையாக, சினிமா குத்து பாடல்களே தொடர்ந்தன.'குடி'மகன்கள் 'ஆட்டம்'இசை நிகழ்ச்சியில், குத்துப்பாடல்கள் பாடியது, 'குடி'மகன்களை குதுாகலப்படுத்தியது. 'ஆடிமாச காத்தடிக்க' பாடலுக்கு, 'குடி'மகன்கள் எழுந்து நின்று, குத்தாட்டம் போடத்துவங்கினர். பதறிய ஏற்பாட்டாளர்கள், 'குடி'மகன்களை துரத்தினர்; இதனால், சலசலப்பு ஏற்பட்டது. கோவில் விழாவில், கண்ணியம் இன்றி, குத்துப்பாடல்களை பாடியதை ரசிக்காத பக்தர்கள் பலரும், பாதியிலேயே எழுந்து சென்றுவிட்டனர்.----ஈஸ்வரன் கோவில் முன், ரோட்டை மறித்து, ஆர்க்கெஸ்ட்ரா மேடை அமைத்ததால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

போக்குவரத்து நெரிசல்

இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்தவர்கள், பூ மார்க்கெட் - கே.எஸ்.சி., பள்ளி செல்லும் ரோட்டில், ஈஸ்வரன் கோவில் அருகே, இரு சக்கர வாகனங்களை தாறுமாறாக பார்க்கிங் செய்திருந்தனர். ரோட்டின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டதால், பெரியகடை வீதி, கே.எஸ்.சி., பள்ளி வீதி, தாராபுரம் ரோடு பகுதிகளுக்கு சென்ற இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள், ஈஸ்வரன் கோவில் பகுதியை கடக்க மிகவும் சிரமப்பட்டனர்.நேற்று காலை, 11:00 மணி வரை, மேடையை அகற்றப்படவில்லை. இதனால், ஈஸ்வரன் கோவில் வீதியை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் பரிதவித்தனர். இருசக்கர வாகன ஓட்டிகள், மேடைக்கு அருகே ஒற்றையடி பாதை வழியாக, சக்தி தியேட்டர் ரோடு, ஈஸ்வரன் கோவில் ரோடு பகுதிக்கும் சென்று வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை