சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடிகள் மறு சீரமைப்பு; அரசியல் கட்சியினருடன் ஆலோசனை
உடுமலை : உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில், ஓட்டுச்சாவடிகள் மறு ஆய்வு செய்வது, அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.உடுமலை சட்ட சபை தொகுதியில், 294 ஓட்டுச்சாவடிகளும், மடத்துக்குளம் தொகுதியில், 287 ஓட்டுச்சாவடிகளும் தற்போது உள்ளது.ஓட்டுச்சாவடிகள் மாற்றம், 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரிப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொண்டு, வரைவு ஓட்டுச்சாவடிகள் பட்டியல் தயாரிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.அதன் அடிப்படையில், மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில், வரைவு ஓட்டுச்சாவடிகள் பட்டியல் வெளியிடப்பட்டது.இதனையடுத்து, உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளில், ஓட்டுச்சாவடிகள் மறு ஆய்வு மேற்கொள்வது குறித்து, அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம், உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ஜலஜா தலைமை வகித்தார்.மடத்துக்குளம் தாசில்தார் பானுமதி, உடுமலை தொகுதி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சையது ராபியம்மாள், மடத்துக்குளம், வளர்மதி மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.இதில், வாக்குச்சாவடி மையங்கள் இடமாற்றம், கட்டட மாற்றம் மற்றும், 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரித்து, கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைப்பது, ஓட்டுச்சாடிகள் பெயர் மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.