சம்பள நிர்ணய அரசாணை தொழிலாளருக்கு வஞ்சனை
திருப்பூர்; ஏ.ஐ.டி.யு.சி., பனியன் சங்க பொதுக்குழு கூட்டம், பி.என்., ரோடு சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பனியன் சங்க பொதுச்செயலாளர் சேகர், ஏ.ஐ.டி.யு.சி. பொது செயலாளர் நடராஜன் ஆகியோர் பேசினர்.தமிழக அரசு, கடந்த மாதம் 18ம் தேதி வெளியிட்டுள்ள, குறைந்தபட்ச சம்பள நிர்ணய அரசாணையில், நடைமுறை சம்பளத்தை காட்டிலும் குறைவான சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எவ்வித வழிகாட்டுதலையும் பின்பற்றாமல், தொழிலாளர்களை வஞ்சிக்கும் வகையில் நிர்ணயம் செய்துள்ளனர். அரசாணையை ரத்து செய்துவிட்டு, விலைவாசி புள்ளி விவரங்களை கருத்தில்கொண்டு, புதிய சம்பள நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட வேண்டும். தொழிலாளர்களுக்கு ஏற்படும் ஆபத்தை விளக்கி, வரும் 18ம் தேதி நடக்க உள்ள, அனைத்து சங்க கூட்டத்தில், ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் பங்கேற்று கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்.புதிய இ.எஸ்.ஐ., மருத்துவமனையை முழு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்; மருத்துவர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பனியன் தொழிலாளருக்கு அடுக்குமாடி குடியிருப்பு வேண்டுமென, தொடர்ச்சியாக மனு அளித்து வருகிறோம். தமிழக அரசு தலையிட்டு, தகுதியான தொழிலாளர்களுக்கு, அடுக்குமாடி வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.