எஸ்.ஜி.எப்.ஐ., மண்டல அணி தேர்வு 685 வீராங்கனையர் பங்கேற்பு
திருப்பூர்;நத்தக்காடையூரில் நடந்த எஸ்.ஜி.எப்.ஐ., மண்டல அணி தேர்வுக்கு, நான்கு மாவட்டங்களில் இருந்து, 685 வீராங்கனையர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில், கூடைப்பந்து, ேஹண்ட்பால், கபடி மண்டல அணிக்கான வீராங்கனையர் தேர்வு, காங்கயம் அடுத்த நத்தக்காடையூர், பில்டர்ஸ் இன்ஜி., கல்லுாரியில் நேற்று நடந்தது.முன்னதாக தேர்வு போட்டியை கல்லுாரி முதல்வர் ராம்குமார் துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், அவிநாசி அரசு கலைக்கல்லுாரி உடற்கல்வி இயக்குனர், பிரசன்னாகுமார் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் போட்டி, முத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்திலதிபன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தலின் படி, ஈரோடு, கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருந்து, 50க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த வீராங்கனையர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 14, 17 மற்றும் 19 வயது பிரிவு கூடைப்பந்து அணி தேர்வுக்கு, 155 பேர், எறிபந்து போட்டி - 210, கபடி - 320 பேர் என மொத்தம், 685 பேர் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, 140 வீராங்கனையர் பங்கேற்றனர்.