உடுமலை: கொங்கல்நகரம் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் இருந்து, 24 மணி நேர மும்முனை மின்சாரம் வினியோகிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள கிராமங்களுக்கு, கொங்கல்நகரம், பூளவாடி, ஆலாமரத்துார், நெகமம் உட்பட துணை மின் நிலையங்களின் வாயிலாக, மின் வினியோகம் உள்ளது.இதில், கொங்கல்நகரம், ஆலாமரத்துார், நெகமம் துணை மின் நிலையங்களில் இருந்து கிராமங்களுக்கு, 'ரூரல் பீடர்', என்ற அடிப்படையில், நாள்தோறும் குறிப்பிட்ட மணி நேரம் மட்டும், மும்முனை மின்சாரம், வினியோகிக்கப்படுகிறது.பிற நேரங்களில், துணை மின் நிலையங்களில், சம்பந்தப்பட்ட மின்பாதைகளில், இரு முனை மின்சாரம் மட்டுமே வினியோகிக்கப்படும்.இதனால், விவசாய மின் இணைப்பு மோட்டார்களை கூட இயக்க முடியாது. குறிப்பிட்ட நேரம் மட்டும் கிடைக்கும் மும்முனை மின்சாரத்தை பயன்படுத்தி, அப்பகுதி விவசாயிகள், தென்னை உட்பட நீண்ட கால பயிர்களை பயிரிட்டுள்ளனர்.சிறு, குறு, நடுத்தர தொழில் துறை சார்பில், 2008ம் ஆண்டு, குடிமங்கலம் ஒன்றியம், மாநிலத்தில், தொழில் வளத்தில் பின்தங்கிய பகுதியாக, அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து, இப்பகுதியில், தொழில் வளத்தை அதிகரிக்க, பல்வேறு மானியத்திட்டங்களும், மாவட்ட தொழில் மையத்தால், செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டங்களில், கடனுதவி பெற்று, தொழில் துவங்க, குடிமங்கலம் பகுதி இளைஞர்கள், ஆர்வம் காட்டுகின்றனர்.மேலும், கயிறு திரித்தல், தென்னை நார் உற்பத்தி, தேங்காய் தொட்டியிலிருந்து கார்பன் உற்பத்தி, அட்டை பெட்டி தயாரித்தல், நார் கழிவிலிருந்து 'பித் பிளாக்' கட்டிகள் தயாரிப்பு என பல்வேறு சிறு தொழில்களுக்கான வாய்ப்பு, இப்பகுதியில், அதிகளவு உள்ளது.குறைந்தளவு விசைத்தறிகளையும் நிறுவி, பல இளைஞர்கள், பணியாற்றி வருகின்றனர். ஆனால், 24 மணி நேர மும்முனை மின் வினியோகம் இல்லாததால், தொழில் துவங்க முடிவதில்லை.இத்தகைய தொழிற்சாலைகள் துவங்க, தனியாக மும்முனை மின் இணைப்பு பாதை மின்வாரியத்தால் அமைக்கப்படுகிறது.இதற்கு, தொழில் துவங்கும் அளவிற்கு, கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை, தொழில் முனைவோருக்கு ஏற்படுகிறது. இப்பிரச்னையால், பிற பகுதிகளுக்கு, சிறு, குறு தொழிற்சாலைகளை வேறு இடத்தில் துவங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.அப்பகுதி மக்கள் அரசுக்கு அனுப்பியுள்ள மனு: எங்கள் பகுதிக்கு, 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க தேவையான மின்பாதை உட்பட அனைத்து கட்டமைப்புகளும், உள்ளன.இருப்பினும், பல ஆண்டு கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. கொங்கல்நகரம், நெகமம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு, 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கி, விவசாயம் மற்றும் சிறு, குறு தொழில்களை பாதுகாக்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.இவ்வாறு, மனுவில், தெரிவிக்கப்பட்டுள்ளது.