குற்றங்கள் நடக்கும் பிரதான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது!
திருப்பூர் : ''குற்றங்கள் நடக்கும் பிரதான மாநிலமாக தமிழகம் மாறி விட்டது,'' என, திருப்பூரில் நடந்த அடையாள அட்டை வழங்கும் விழாவில், பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.திருப்பூரில் நேற்று அ.தி.மு.க.,வினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கி, மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:திருப்பூரில் சொத்து வரி, மின் கட்டண உயர்வு, போன்றவற்றால் தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். பலர் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இங்குள்ள தொழில்களை காப்பாற்றாமல் அமெரிக்காவில் உள்ள தொழில்துறையினரை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வாருங்கள் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுக்கிறார்.இது தொழில்துறையினரை சந்திக்கும் பயணமா அல்லது ஸ்டாலின் சைக்கிளில் சுற்றும் உல்லாச பயணமா என்பது போகப்போகத்தான் தெரியும். ஜனநாயக நாட்டில் கட்சி ஆரம்பிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. யார் கட்சி ஆரம்பித்தாலும் மக்களின் முன்னேற்றத்திற்காக போராட வேண்டும். தமிழகத்தில் தினந்தோறும் கொலை, கொள்ளை, பலாத்காரம் போன்றவை நடைபெற்று வருகிறது. குற்றசம்பவங்கள் நடக்கின்ற பிரதான மாநிலமாக தமிழகம் மாறி விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.