தமிழக புதிய ஜவுளிக்கொள்கை தயாராகிறது: ஜவுளி மேம்பாட்டுக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு
திருப்பூர் : ''தொழில்நுட்ப ஜவுளி மேம்பாட்டில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக, 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, தமிழக அரசின் ஜவுளித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறினார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இந்தியா நிட்பேர் அசோசியேஷன், பின்னலாடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில், 51வது இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சி திருமுருகன்பூண்டி ஐ.கே.எப்., வளாகத்தில் நேற்று துவங்கியது. கலெக்டர் கிறிஸ்துராஜ், ஐ.கே.எப்., தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.கண்காட்சியை தமிழக அரசின் ஜவுளித்துறை முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் திறந்து வைத்து, நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக அரசு, புதிய ஜவுளிக்கொள்கையை தயாரித்து வருகிறது. மற்ற மாநிலங்கள், அதிக மானியம் வழங்குவதாக கூறி, தொழில் துவங்க அழைப்பு விடுக்கின்றன. தமிழகத்தில், தொழில்கள் நீடித்த நிலையான தன்மையுடன் இயங்குகின்றன; மானியமும் அதிக அளவு ஒதுக்கப்படுகிறது. 'டெக்னிக்கல் டெக்ஸ்டைல்' எனப்படும், தொழில்நுட்ப ஜவுளி, 12 வகையான பிரிவுகளாக, பிரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விளையாட்டு சீருடை உற்பத்தி மேம்பாட்டில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. ஜவுளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக, 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய ஜவுளி கொள்கையில், 'ஸ்பின்னிங்' மில்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும். நாட்டின், 35 சதவீத நுாற்பாலைகள் தமிழகத்தில் உள்ளன.அவற்றை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக, 6 சதவீத வட்டி மானியத்துடன், கடன் உதவி வழங்க, 500 கோடி ரூபாய் நிதி தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.விசைத்தறி தொழில் பரவலாக இருந்தும், 'பிராசசிங்' தொழில் பிரிவில் கவனம் செலுத்தாமல் இருந்துவிட்டோம். உற்பத்தியாகும் துணிகள், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத் செல்கின்றன. தமிழகத்தில் 'பிராசசிங்' யூனிட்டுகளை உருவாக்க, புதிய ஜவுளிக்கொள்கை தயாரிக்கப்படும்.மறுசுழற்சி, 'வளம் குன்றா வளர்ச்சி நிலை' உற்பத்தியில், தமிழகம் எப்போதும் தலைமையிடத்தில் இருக்கிறது. ஜவுளி தொழிலை அடுத்தகட்டத்துக்கு உயர்த்தும் அம்சங்கள், ஜவுளி கொள்கையில் இடம்பெறும். சர்வதேச சந்தை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், தமிழக தொழில்கள் தயார்படுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.