சிதிலமடைந்த அங்கன்வாடி மைய கட்டடம் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றணும்
உடுமலை; கணக்கம்பாளையம் ஆறுமுககவுண்டர் லே - அவுட் அங்கன்வாடி மையத்தை, வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஆறுமுககவுண்டர் லே - அவுட் பகுதியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில், அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இந்த மையத்தில், பத்துக்கும் அதிகமான குழந்தைகள் உள்ளனர்.அங்கன்வாடி மையத்தின் கட்டடம் பராமரிப்பில்லாமல் இருப்பதால், குழந்தைகளுக்கு எந்த நேரத்திலும் ஆபத்தான சூழல் இருப்பதாக, பெற்றோர் அச்சப்படுகின்றனர்.மையத்தின் கட்டடம் கட்டப்பட்டு, பத்து ஆண்டுகளை கடந்து விட்டது. கடந்த மூன்றாண்டுக்கு முன், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இருப்பினும், மழைநாட்களில் மையத்தின் தரைதளத்தில் மழைநீர் கசிவு ஏற்படுவதும், மேற்கூரையில் ஈரம் படிவதுமாக தொடர்கிறது.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மழை பெய்த போது, மையத்தை சுற்றிலும் மழைநீர் குளமாகியது. இதனால் கொசுத்தொல்லை ஏற்படுவதுடன், விஷப்பூச்சிகள் சுற்றுவதும் அதிகரித்தது.இதுகுறித்து, செய்தி வெளியிட்ட பின், தற்காலிகமாக மையம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் பழைய கட்டடத்தில் மையம் செயல்படுகிறது. இருப்பினும், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதால், பெற்றோர் எந்த நேரமும் அருகில் இருப்பதற்கு மைய பணியாளர்களிடம் கேட்கின்றனர்.அங்கன்வாடி மையத்தின் கட்டடத்தை, புதிதாக மாற்றுவதற்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், சமூக நலத்துறைக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இருப்பினும், இதுவரை அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் விரைவில் புதிய கட்டடம் கட்டுவதற்கும், அதுவரை வேறு பாதுகாப்பான இடத்தில் மையத்தை மாற்றி செயல்படுத்துவதற்கும் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.