நீர் செறிவூட்டும் திட்டத்துக்கு விவசாயிகள் வரவேற்பு தன்னார்வலர்களிடம் ஒப்படைக்க யோசனை
பல்லடம்;நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை வரவேற்பதுடன், அதனை தன்னார்வலர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.இது குறித்து அதன் ஊடகப்பிரிவு மாநில செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:நீர்வளத்துறை சார்பில், பல்லடம் சட்டசபை தொகுதியிலுள்ள இச்சிப்பட்டி, கேடங்கிபாளையம், அய்யம்பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள குளம் குட்டைகளுக்கு, சாமளாபுரத்தில் உறை கிணறு அமைத்து, நீரேற்று முறையில் நீரைக் கொண்டு சென்று, 12 குளம் குட்டைகளில் நிரப்பி, நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.விவசாயிகளுக்கு பயனளிக்கும் இத்திட்டத்தை வரவேற்கிறோம். இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, பல்லவராயம்பாளையம் குட்டைக்கும் கொண்டு செல்வதன் மூலம், ஏராளமான கிராமங்கள் இதில் பயன்பெறும். மேலும், தன்னார்வலர்கள் பலர் ஏற்கனவே திட்டத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்ட நிலையில், பல இடையூறுகள் காரணமாக தடைபட்டது.அரசு அனுமதி வழங்கி, அரசு அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கும் பட்சத்தில், தன்னார்வலர்கள் இத்திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பு உள்ளது. இதற்காக அரசு நிதியை ஒதுக்கி வீணடிப்பது தேவையற்றது. எனவே, மாவட்ட நிர்வாகம், தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து, இதுதொடர்பாக ஆலோசித்து செயல்பட வேண்டும்.இதேபோல், சூலுார் குளத்தை முழுமையாக துார்வாரி, நீரை கொண்டு வருவதால், கரடிவாவி, பருவாய், செம்மிபாளையம், சுங்கம்பாளையம் உள்ளிட்ட பல்லடத்தின் மேற்கு பகுதி கிராமங்களும் பயனடையும். எனவே, இது குறித்தும் மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.