மேலும் செய்திகள்
பட்ஜெட் பேட்டி
15-Mar-2025
திருப்பூர்: தமிழக பட்ஜெட்டில், பின்னலாடை தொழிலுக்கான அறிவிப்பும் இடம்பெறாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மானிய கோரிக் கையின் போது, திருப்பூருக்கு ஏதாவது அறிவிப்பு வருமா என, தொழில்துறையினர் காத்திருக்கின்றனர்.தமிழக அரசின் பட்ஜெட், ஒட்டுமொத்த தொழில்துறைக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ள பட்ஜெட்டாக இருக்கிறது. கல்வி, பெண்கள் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டிருந்தாலும் திருப்பூர் பின்னலாடை தொழிலில் உள்ள குறு, சிறு நிறுவனங்களின் கோரிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை. ஒட்டு மொத்த ஏமாற்றம்
'டீமா' தலைவர் முத்துரத்தினம்:பட்ஜெட்டில், மின் கட்டண சலுகை, சூரிய ஒளி மின் ஆற்றல் மானியம் போன்ற அறிவிப்பு இல்லை. வறட்சியான மாவட்டங்களில், ஜவுளி பூங்கா வருமென எதிர்பார்த்தோம்; பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்பு இடம்பெறவில்லை.பருத்தி கொள்முதல் கழகம் தொடர்பான அறிவிப்பும் இல்லை. திருப்பூரை தலைமையிடமாக கொண்ட ஜவுளி மண்டலம் உருவாக்கும் அறிவிப்பும் இல்லை. இது ஒட்டுமொத்த தொழில்துறைக்கு ஏமாற்றமான பட்ஜெட். குறைந்த வட்டியில் கடன்
'நிட்மா' தலைவர் ரத்தினசாமி:பல்வேறு காரணத்தால், குறு, சிறு தொழில்கள் நலிவடைந்துள்ளன; அவற்றை மீட்டெடுக்க, அதிக அளவு கடன் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். மனிதர்கள் மேம்பட கல்வி அவசியம், இந்த பட்ஜெட்டில், இரட்டிப்பாக நிதி ஒதுக்கியுள்ளனர்; அதாவது, 46 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதை வரவேற்கிறோம். குறைந்த வட்டியில் கடன் வழங்குவது, குறுந்தொழில்களுக்கு ஆதரவாக இருக்கும். பயனளிக்கும் திட்டங்கள்
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன்:குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக, 2.50 லட்சம் கோடி ரூபாய் வரையிலான கடன் திட்டத்தால், தொழில் வளர்ச்சி ஏற்படும். விசைத்தறி தொழில் மேம்பாட்டுக்கு, 50 கோடி ரூபாய்; மகளிர் நலன், கல்வித்துறை வரவேற்புகளை வரவேற்கிறோம். கோவை, மதுரைக்கான மெட்ரோ ரயில் பணிகள், கோவை, திருப்பூர், ஈரோடு வழித்தடத்தில் அதிவேக ரயில்சேவை திட்டம் பயனளிக்கும். வரும் ஆண்டில், 40 ஆயிரம் மெகாவாட் திறனுள்ள மின்கலன் சேமிப்பு அமைப்புகள் உருவாக்குவது, பயனுள்ளதாக இக்கும். திருப்பூருக்கு ஒன்றுமில்லை
'டெக்பா' தலைவர் ஸ்ரீகாந்த்:விவசாயத்துக்கு அடுத்தபடியாக, அதிக வேலைவாய்ப்பு வழங்கும் பின்னலாடை தொழிலுக்கு, எவ்வித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமாக இருக்கிறது. கைத்தறி, விசைத்தறி போன்ற அறிவிப்புகள் இருக்கின்றன. பின்னலாடை தொழில்துறையினரின் கோரிக்கை, தமிழக பட்ஜெட்டில் பிரதிபலிக்கவில்லை. விசைத்தறி கிளஸ்டர்
தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னல் துணி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் விவேகானந்தன்:பல்லடம், சூலுாரில், செமி கண் டக்டர் தொழிற்சாலை, முழு தானியங்கி கம்ப்யூட்டர் உதவி மையங்கள், அடுத்த ஐந்தாண்டுகளில் நிறுவ, ஆண்டுக்கு, 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு. தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்துக்கு, 15 கோடி ரூபாய், விசைத்தறி கிளஸ்டர்களில், ஏற்றுமதி பொருட்களுக்கான தறிக்குடோன், சி.எப்,சி., மற்றும் சோதனை கூடம் அமைக்க, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.புதிய ஜவுளிக்கொள்கையில், நிட்டிங் தொழில் சேர்க்கப்படாதது, மின் உற்பத்தி திட்டத்தின் நெட்வொர்க் கட்டணம் குறைப்பு, மின்சார நிலை கட்டணம் குறைப்பு ஆகியன இடம் பெறவில்லை. மின்சார பஸ் அறிவிப்பு
'ரைசிங்' உரிமையாளர்கள் சங்க தலைவர் ராமசாமி:தொழில்துறைக்கு, 3,915 கோடி ரூபாயும், குறு சிறு நடுத்தர தொழில்களுக்கு, 1918 கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளதை வரவேற்கிறோம். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுக்கு, 1,975 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதால், உற்பத்தி வளம், தரமான தயாரிப்பு மேம்படும். சென்னை, கோவை, மதுரை நகரங்களில், மின்சார பஸ் இயக்கும் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது; திருப்பூரிலும் செயல்படுத்தினால், லட்சக்கணக்கான தொழிலாளர் பயனடைவர். வருத்தம் அளிக்கிறது
எலாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்க தலைவர் கோவிந்தசாமி:விசைத்தறி மேம்பாட்டுக்கான, திறன் மேம்பாட்டு பயிற்சி, புதிய 'சிப்காட்' அமைப்பது தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும். பனியன் தொழில் சார்ந்த அறிவிப்பு இல்லாதது வருத்தம் அளிக்கிறது. திருப்பூரின் கோரிக்கையை, வரும் பட்ஜெட் மானிய கோரிக்கையின் போது முதல்வர் அறிவிக்க வேண்டும். செயல்படுத்தணும்!
'ஸ்டார்ட் அப் இந்தியா' வழிகாட்டி ஆலோசகர் ஜெய்பிரகாஷ்:தமிழக பட்ஜெட்டில், ஸ்பின்னிங் பகுதிகளை நவீனமாக்க, 6 சதவீத வட்டி மானியத்துடன், 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மினி டெக்ஸ்டைல் பூங்கா அமைக்க, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டங்கள் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், திட்டம் பயனுள்ளதாக இருக்காது. நவீனமாக்கம், ஆராய்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றங்களால், தமிழகம் ஜவுளி மையமாக மாறும் வாய்ப்புள்ளது. அறிவிப்புகளை, சரிவர செயல்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும். கடனுதவி அவசியம்
திருப்பூர் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்க பொதுசெயலாளர் ரவிச்சந்திரன்:குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், கடந்த சில ஆண்டுகளாக கடும் சிரமத்தில் உள்ளன. அவற்றை மீட்டெடுக்க, கடனுதவி அவசியம். அதன்படி, 2.50 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கும் அறிவிப்பை, சரிவர செயல்படுத்தினால், திருப்பூர் தொழில்துறையினர் பயன்பெறுவர். தொழில் அதிகரிக்கும்
செகண்ட்ஸ் பனியன் வியாபாரிகள் சங்க தலைவர் நாகராஜன்:மகளிர் புதிதாக தொழில்துவங்க, 20 சதவீத மானியத்துடன், தொழிற்கடன் வழங்கும் அறிவிப்பால், புதிய தொழில் துவங்குவது அதிகரிக்கும். வெளிநாடுகளில், தமிழ் புத்தக கண்காட்சி நடத்துவது, தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பு போன்ற அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை.
15-Mar-2025