திருப்பூர்:இடுவாய் ஊராட்சியை, திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாமென, அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருப்பூர் அருகேயுள்ள இடுவாய் ஊராட்சியின் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம், கன்னியாத்தாள் கோவில் மண்டபத்தில் நேற்று நடந்தது. ஊராட்சியில், 2,752 பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள்; ஊராட்சியில், உழைக்கும் மக்கள் 2,752 பேர், தேசிய வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். எம்.பி., - எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதி வாயிலாக, அடிப்படை வசதி செய்து கொடுக்கப்படுகிறது. இடுவாயில், வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்போர் எண்ணிக்கை அதிகம் என்பதால், திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் போது, வேலையிழப்பு ஏற்படும்; மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஊராட்சி தலைவர் கணேசன் தலைமையில் நடந்த கூட்டத்தில், கட்சி பிரதிநிதிகள் கருப்பசாமி (மா.கம்யூ.,), பாலகிருஷ்ணன், பழனியப்பன், பொன்னுசாமி, சுப்பிரமணி (அ.தி.மு.க.,), சிவமணி(ம.தி.மு.க.,), ஈஸ்வரன்(தமிழக விவசாயிகள் சங்கம்), பழனிசாமி(இ.கம்யூ.,), சிந்தன்(ஜனநாயக வாலிபர் சங்கம்), செல்வக்குமார், கிருஷ்ணகுமார்(நாம் தமிழர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அனைத்து கட்சி கூட்டத்தின் தீர்மானம் மற்றும் ஊராட்சி மன்றத்தின் தீர்மானங்களை, நேற்று கலெக்டரிடம் வழங்கினர். ----இடுவாய் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம் அனைத்து கட்சியினர் மனு கொடுத்தனர்.