அவிநாசி : நீலகிரி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டியில் பிரசாரம் மேற்கொண்டார்.திருமுருகன்பூண்டி, அணைப்புதுார், அம்மாபாளையம், ராக்கியாபாளையம், தேவராயம்பாளையம் மற்றும் கணியாம்பூண்டி, காசி கவுண்டம்புதுார், பெரியாயிபாளையம், நடுவச்சேரி, முத்து செட்டிபாளையம், வடக்கு ரத வீதி, கைகாட்டிப்புதுார் ஆகிய பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேசியதாவது:கடந்த முறை வெற்றி பெற்ற எம்.பி., ராஜா இதுவரை இந்த தொகுதிக்கும், மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்கவும் இல்லை. லோக்சபா கேள்வி நேரத்தில் மக்களின் பிரச்னையை பற்றி பேசியது இல்லை. ஆனால், பத்து ஆண்டாக எம்.பி.,யாக உள்ளார்.தி.மு.க., கடந்த மூன்று ஆண்டாக ஆட்சியில் உள்ளது. ஓட்டுப்போட்ட மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை கூட செய்யவில்லை. கஞ்சா, போதை பொருள் ஆகியன தி.மு.க., ஆட்சியில் விற்பனை கொடி கட்டிப் பறக்கிறது. இரவு, 7:00 மணிக்கு மேல் வீதியில் பொதுமக்கள் நடமாட பயப்படுகின்றனர்.தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல திட்டங்களை, தந்தவர் ஜெயலலிதா. அதன் அடிப்படையிலேயே மக்களாகிய உங்களிடம் ஓட்டு கேட்டு நான் உங்கள் முன் நிற்கிறேன்.அத்திக்கடவு - அவிநாசி திட்டம், முன்னாள் முதல்வர் பழனிசாமியால் மூன்று மாவட்ட மக்களுக்காக திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால், தி.மு.க.,வினர் வேண்டுமென்றே முட்டுக்கட்டை போட்டு, திட்டத்தை நிறைவேற்றாமல் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.