உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேளாண் பட்ஜெட்டுக்கு வெள்ளை அறிக்கை

வேளாண் பட்ஜெட்டுக்கு வெள்ளை அறிக்கை

பொங்கலுார்: தி.மு.க., ஆட்சியில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:தி.மு.க., 2021ம் ஆண்டிலிருந்து வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறது. அதற்கு முன் மாநில, மண்டல அளவில் கருத்து கேட்பு கூட்டம் தி.மு.க., ஆதரவாளர்களை வைத்து நடத்தப்படுகிறது. வேளாண் துறையினரும் அதனையே பின்பற்றுகின்றனர். இதனால், அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் பிரச்னை, திட்டம் அமலாகாதது, திட்டங்களை கேட்டு கோரிக்கை வைப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன் என்ன நடந்ததோ அது தான் நடக்கிறது.அமைச்சர் பன்னீர்செல்வத்தின் செயலால் தி.மு.க., அரசுக்குத்தான் அவப்பெயர் ஏற்படுகிறது. கருத்து சொல்ல முன்வரும் விவசாய சங்கப் பிரதிநிதிகளை ஒருமையில் பேசுவது வாடிக்கையாக உள்ளது. ஒவ்வொரு கூட்டத்திலும் மக்கள் வரிப்பணம் தேவையில்லாமல் வீணடிக்கப்படுகிறது. 4 ஆண்டுகளாக கேட்கப்பட்ட கருத்துக்கள் நடைமுறைப்படுத்தப் படவில்லை. தி.மு.க.,வின், 505 தேர்தல் வாக்குறுதிகளில், 23 முதல், 110 வரையிலான, 83 வாக்குறுதிகள் விவசாயிகள் சம்பந்தப்பட்டவை.அதில், 10 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்தபின் விவசாயிகள் வாழ்வாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றம், திட்டங்களின் செயலாக்க முன்னேற்றம் குறித்தும், கருத்து கேட்பு கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அவற்றில் நடைமுறைப்படுத்தப்பட்ட கருத்துக்கள் என்னென்ன என்பது குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை