யார் கட்டுப்பாட்டில் உள்ளது நீர் நிலை?
பல்லடம்: பல்லடம் அடுத்த பருவாய் கிராமத்தில் சின்ன குட்டை உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களுக்கு இக்குட்டை நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் மிகுந்த இப்பகுதியில், குட்டை நீர், பாசனத்துக்கு பெரிதும் பயன்பட்டு வருகிறது. குட்டையின் தடுப்புச் சுவரில் ஏற்பட்டுள்ள ஓட்டையில் இருந்து தண்ணீர் கசிந்து வெளியேறி வருவதால், மழை நீரை சேகரிக்க முடியாத நிலை உள்ளது. தடுப்புச் சுவர் ஓட்டையை அடைத்து, மழைநீர் சேகரிக்க வழிவகை செய்யுமாறு, இப்பகுதி விவசாயிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கிடையே, இப்பகுதி விவசாயிகள், இளைஞர்கள் இணைந்து, இது தொடர்பாக, முதல்வர் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி வைத்தனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ''குட்டை தடுப்புச்சுவரில் ஓட்டை விழுந்து ஆறு ஆண்டுக்கு மேல் ஆகியும், இதை அடைப்பதற்கான எந்த முயற்சியையும் அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மேற்கொள்ளவில்லை.புகார் மனு அனுப்பிய பின், ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், இது, தங்களது கட்டுப்பாட்டில் இல்லை என்று கூறி திரும்பிச் சென்றனர். ஒரு கிராமத்தில் உள்ள நீர்நிலை, எந்தத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது அதிகாரிகளுக்கே தெரியவில்லை. யாருடைய கட்டுப்பாட்டில் குட்டை வருகிறது என்பதை கண்டுபிடிக்கவே இத்தனை ஆண்டுகள் என்றால், தடுப்புச்சுவர் ஓட்டையை அடைப்பது எப்போது என்று தெரியவில்லை.எந்த துறையின் கட்டுப்பாட்டில் குட்டை உள்ளது என்பதை விரைவாக கண்டறிந்து, தடுப்பு சுவர் ஓட்டையை அடைக்க அதிகாரிகள் முன் வர வேண்டும்'' என்றனர்.