கடை கிடைக்குமா? தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் ஆலோசனை
திருப்பூர் : புதிய மார்க்கெட் வளாக கடைகள் பொது ஏலம் விடப்படும் என உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகர மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் தங்கமுத்து கூறியதாவது:மாநகராட்சி நிர்வாகம் சார்பில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், தினசரி மார்க்கெட் வளாகம் கட்டுமானப் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த வளாக கடைகள் வியாபாரிகளுக்கு ஒதுக்குவது தொடர்பாக மாநகராட்சி கமிஷனருடன் சங்க நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பின் போது, கட்டுமானப் பணியை விரைந்து முடித்து கடைகளை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தோம். மேலும், வளாகத்தில் சில மாற்றங்கள் கூடுதல் வசதிகள் ஏற்படுத்துவது குறித்த கருத்துகளை அவர் கேட்டுக் கொண்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்வது குறித்து கேட்டதற்கு, பொதுப்பணித்துறை நிர்ணயிக்கும் அளவு வாடகை வழிகாட்டி அடிப்படையில் இது முடிவு செய்யப்படும்; அனைத்து கடைகளும் பொது ஏலம் மூலமாக மட்டுமே வழங்கப்படும்.தற்போதுள்ள வளாகத்தில் வாடகை மற்றும் மின் கட்டணத்தை நிலுவையின்றி செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அனைத்து வியாபாரிகளுக்கும் உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.