கம்பி வேலி சேதம்; விஷமிகள் விளையாட்டு
திருப்பூர்; பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட கம்பி வேலியை சேதப்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், பல கோடி ரூபாய் செலவில், நொய்யல் ஆற்றின் கரைகள் புனரமைத்து பொழுது போக்கு அம்சங்கள் அமைக்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது.நொய்யல் கரையில், சாய்வுதள கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு, கரையோரங்களில் ரோடும் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, ஆற்றுக்குள் குப்பை கழிவுகள் கொண்டு சென்று கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்காக ஆற்றின் இரு கரைகளிலும் கல்துாண் நட்டி, இரும்பு கம்பி வேலிகள் பொருத்தப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் செலவில் இப்பணி நடந்து வருகிறது. ஆனால், நொய்யல் கரையில் சில இடங்களில் கம்பி வேலிகள் சேதப்படுப்பட்டுள்ளன.குறிப்பாக, ராயபுரம் உட்பட பல இடங்களில் கம்பி வேலியை 'கட்' செய்து, நொய்யலுக்குள் இறங்கி விளையாடவும், மது அருந்துதல் போன்ற சட்ட விரோத சம்பவங்களில் ஈடுபடவும், மீன் பிடிக்கவும், பலரும் வருகின்றனர்.இந்த இரும்பு கம்பி வேலியை தடையாக கருதும் விஷமிகள் இதனை சேதப்படுத்தி, ஆற்றுக்குச் செல்கின்றனர். இதனால், இத்திட்டமே வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் குறித்து கண்காணித்து உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும்.