உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வி.ஏ.ஓ.,களுக்குள் குஸ்தி; மக்கள் பணி கடும் பாதிப்பு

வி.ஏ.ஓ.,களுக்குள் குஸ்தி; மக்கள் பணி கடும் பாதிப்பு

திருப்பூர்; பாஸ்வேர்டு பகிர்வு பிரச்னை தீர்க்கப்படாததால், திருப்பூரில் இருதரப்பு வி.ஏ.ஓ., சங்கங்களிடையே 'குஸ்தி' தொடர்கிறது. கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் நேற்றும், திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட தொங்குட்டிபாளையம் கிராமத்தில், கரட்டுப்பாளையம் 'குரூப் கிராமமாக' செயல்படுகிறது. கரட்டுப்பாளையம் வி.ஏ.ஓ., விஸ்வநாதனுக்கு, தொங்குட்டிபாளையம் வி.ஏ.ஓ, விஜயராகவன், 'ஆன்லைன்' விண்ணப்பங்களை கையாள 'லாகின் - பாஸ்வேர்டு' வழங்க மறுத்துள்ளார். இதனால், 'லாகின் - பாஸ்வேர்டு' வழங்க வலியுறுத்தி, விஸ்வநாதனுக்கு ஆதரவாக கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர், கடந்த 5, 6 தேதிகளில், ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.அப்போது, டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் முன்னிலையில், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு எட்டப்படாதநிலையில், வி.ஏ.ஓ.,க்கள் இருவரையும் வேறு கிராமங்களுக்கு டிரான்ஸ்பர் செய்ய டி.ஆர்.ஓ., அறிவுறுத்தினார். ஆனால், ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் அதே பிரச்னைக்காக, கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் நேற்று ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.மாலை, 5:00 மணிக்கு, ஆர்.டி.ஓ., அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு, கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினருடன், கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசினார்.

கலெக்டர் 'அட்வைஸ்'

இது குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜிடம் கேட்டபோது, ''இருதரப்பு சங்கத்தினரையும் தங்களுக்குள் பேசி சுமூக தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், கிராமங்களில் வருவாய் பணிகள் பாதிப்பதை உணர முடிகிறது. இருதரப்பினரும் சுமூக முடிவு எடுக்காதபட்சத்தில், வி.ஏ.ஓ.,க்கள் இருவரையும் வெவ்வேறு கிராமங்களுக்கு பணியிட மாறுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.வி.ஏ.ஓ.,க்களின் காத்திருப்பு போராட்டத்தால், நேற்றும் பல கிராமங்களில், பட்டா மாறுதல், வருவாய், பிறப்பு - இறப்பு சான்று வழங்கல் உள்ளிட்ட அனைத்து வகையான வருவாய் பணிகளும் முடங்கின. இதனால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ