ராணுவ கல்லுாரியில் 8ம் வகுப்பு சேர்க்கை; எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
திருப்பூர்;கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:உத்தரகான்ட் மாநிலம், டேராடூன் ராஷ்ட்ரிய இந்தியன் ராணுவ கல்லுாரியில், வரும், 2026ம் ஆண்டு எட்டாம் வகுப்பு சேர்க்கைக்கான எழுத்துத்தேர்வு, நாடுமுழுவதும் சில மையங்களில் வரும் ஜூன் 1 ல் நடைபெற உள்ளது. இந்த தேர்வு சென்னையிலும் நடைபெற உள்ளது.எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். வரும் 2026, ஜன., 1ம் தேதியன்று, பதினொறரை வயது பூர்த்தியடைந்தவராகவும், 13 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும்.அதாவது, 2013, ஜன. 2 முதல் 2014, ஜூலை 1 ம் தேதிக்குள் பிறந்தவராக இருக்கவேண்டும். ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஏழாம் வகுப்பு படித்துவரும் சிறுவர், சிறுமியர் இருபாலரும் பங்கேற்கலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், 555 ரூபாய், மற்றவர்களுக்கு, 600 ரூபாய் கட்டணத்தை, 'The Commandant RIMC Fund' என்கிற பெயரில், HDFC Bank, Ballupurchowk, Dehradun (Bank Code - 1399), Uttarakhand என்கிற வங்கியில் மாற்றத்தக்கவகையில், டி.டி.,யாக எடுக்கவேண்டும். 'கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்தியன் மிலிட்டரி கல்லுாரி, டெஹ்ராடூன் - 248003, உத்ரகாண்ட் என்கிற முகவரிக்கு அனுப்பி, விண்ணப்பம் பெறலாம்.இதுதவிர, www.rimc.gov.inஎன்கிற இணையதளம் வாயிலாக, ஆன்லைனிலும் தொகையை செலுத்தலாம். விண்ணப்பங்களை, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சென்னை - 3 என்கிற முகவரிக்கு, வரும் மார்ச் 31 ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், தேர்வுக்கு விண்ணப்பித்து பயன்பெறவேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.