உழவர் சந்தையில் ரூ.11.46 கோடிக்கு காய்கறி விற்பனை
திருப்பூர்: திருப்பூர் வடக்கு மற்றும் தெற்குக்கு உழவர் சந்தையில் கடந்த அக்., மாதத்தில், 11 கோடியே, 46 லட்சத்து, 13 ஆயிரத்து, 329 ரூபாய்க்கு காய்கறி வர்த்தகம் நடந்துள்ளது.திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட் பின் உள்ள வடக்கு உழவர் சந்தையில், அக்., மாதத்தில், 845 மெட்ரிக் டன் காய்கறி விற்பனையாகி உள்ளது. மூன்று கோடியே, 83 லட்சத்துக்கு, 99 ஆயிரத்து, 815 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. விளை பொருட்களை, 3,173 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். வாடிக்கையாளர்களாக, ஒரு லட்சத்து 5,650 பேர் வந்துள்ளனர்.அக்., மாதத்தில், பல்லடம் ரோட்டில் உள்ள தெற்கு உழவர் சந்தையில், 2,028 டன் காய்கறி வரத்தாக இருந்தது. காய்கறி, பழங்கள், கீரை வகை என பல்வேறு விதமான விளை பொருட்களுடன், 8,190 விவசாயிகளும், 1.19 லட்சம் வாடிக்கையாளர்களும் சந்தைக்கு வருகை புரிந்தனர்.முப்பது நாட்களில், ஏழு கோடியே, 62 லட்சத்து, 13 ஆயிரத்து, 514 ரூபாய்க்கு காய்கறி விற்பனையாகியுள்ளது.அக்., மாதம் வடக்கு மற்றும் தெற்கு இரண்டு சந்தைகளுக்கும் சேர்த்து, 11 கோடியே, 46 லட்சத்து, 13 ஆயிரத்து, 329 ரூபாய்க்கு காய்கறி வர்த்தகம் நடந்துள்ளது.உழவர் சந்தை அலுவலர்கள் கூறியதாவது:அக்., மாதம் ஆயுத பூஜை, விஜயதசமி, நவராத்திரி விசேஷங்கள் இருந்தது. நிறைவாக, தீபாவளியும் வந்ததால், காய்கறி வரத்தும் விற்பனையும் உயர்ந்தது; வாடிக்கையாளர் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.தெற்கு உழவர் சந்தையில், 1,950 இருந்த முந்தைய மாத வரத்து, அக்டோபரில், 2,000 டன்னை கடந்து விட்டது. 5.72 கோடியே இருந்த வருவாய், 7.62 கோடியாக உயர்ந்து விட்டது.வடக்கு உழவர் சந்தையில், வருவாய், 2.90 கோடியில் இருந்து, 3.83 கோடியாக உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர் எண்ணிக்கை நடப்பாண்டில் முதன்முறையாக, ஒரு லட்சத்தை தொட்டுள்ளது.விசேஷங்கள் ஒரு புறம் இருந்தாலும், இரண்டு சந்தைகளிலும் பத்து நாட்களுக்கு மேலாக தக்காளி விலை அதிகரித்து இருந்தது, வாடிக்கையாளர் வருகை மற்றும் வருவாய்க்கு முக்கிய காரணம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.