வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அரசு எந்த வேலை செய்தாலும் இதே நிலைதான்.
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியேற பயனாளிகள் தயக்கம் காட்டுவதால், 1,300க்கும் மேற்பட்ட வீடுகள் காலியாக உள்ளன.திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், வீரபாண்டி, நெருப்பெரிச்சல், பாரதி நகர், திருக்குமரன் நகர், பூண்டி, அவிநாசி உள்ளிட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு ஏற்கனவே, பயனாளிகள் குடியேறியுள்ள நிலையில், சில வீடுகள் காலியாக உள்ளன.தற்போது பல்லடம், சுக்கம்பாளையம் கிராமத்தில், 'ஹைடெக் பார்க்' என்ற பெயரில், 45.75 கோடி ரூபாய் மதிப்பில், 173 ஏக்கர் பரப்பளவில், 8 தளங்களில், 432 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது; 'லிப்ட்' வசதியும் உண்டு. இதில் வீடு பெற, பங்களிப்பு தொகையாக, 3.09 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்; இதில் 300 வீடுகள் காலியாக உள்ளன.இதேபோல், 'மாவட்டம் முழுக்க, பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், 1,300 வீடுகள் காலியாக இருக்கிறது' என, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடனுதவி வழங்க வங்கிகள் தயக்கம்
அதிகாரிகள் கூறியதாவது: குடியிருப்பை பெற பயனாளியின் பங்களிப்பு தொகை 1.80 லட்சம் துவங்கி, 3.10 லட்சம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்படுகிறது. நீர் நிலை ஆக்கிரமிப்பில் வசிப்பவர்கள், வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்வோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற நிலையில் இருப்போருக்கு, முன்னுரிமை அடிப்படையில் குடியிருப்புகளை ஒதுக்கினாலும், பங்களிப்பு தொகை செலுத்துமளவுக்கு வருமானமில்லை எனக்கூறி, அவர்கள் குடியிருப்புகளை பெற முன்வருவதில்லை. அவர்களுக்கு வங்கிக்கடன் ஏற்பாடு செய்து கொடுத்தாலும், பலர் கடன் தவணையை செலுத்தாததால், வங்கியினர் கடன் வழங்க முன்வருவதில்லை. இலக்கை எட்டாமல் அதிகாரிகள் திணறல்
அரசு வழங்கும் குடியிருப்பு என்பதால் ஜப்தி உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுத்து, கடன் தொகையை திரும்ப வசூலிக்க முடியாது என்பதால், வங்கியினரும் கடன் வழங்க தயங்குகின்றனர். பயனாளிகள் தேர்வில், வாரிய அதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளை பெற யாரும் முன்வராததால், இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
அடுக்குமாடி குடியிருப்புகளில், 400 சதுர அடி பரப்பளவில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒரு சிறிய குடும்பம், வசதியுடன் வாழ்வதற்கான சூழல் அங்குள்ளது. குடியிருப்புகளை பெற பயனாளிகள் பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும் என்ற நிலையில், முந்தைய ஆண்டுகளில் அதிகபட்சம், 80 முதல், 1.50 லட்சம் ரூபாய் வரை பங்களிப்பு தொகை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கட்டுமானப் பொருட்கள் விலையேற்றத்தால் தற்போது கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கான கட்டுமான செலவினத் தொகை மும்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பயனாளிகளின் பங்களிப்பு தொகையும், 1.80 லட்சம் துவங்கி, 3.10 லட்சம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்படுகிறது. - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள்.
அரசு எந்த வேலை செய்தாலும் இதே நிலைதான்.