தெரு நாய் கடித்து குதறி 2 ஆடுகள் பரிதாப பலி
பல்லடம்; பல்லடம், பனப்பாளையத்தை சேர்ந்தவர் சிவசாமி, 58; கால்நடை விவசாயி. மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த இரண்டு ஆடுகளை, தெருநாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறியதில், இரண்டு ஆடுகளும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி உயிரிழந்தன.இது குறித்து அவர் கூறுகையில், 'கடந்த வாரம் குண்டடம் சந்தையில் இருந்து ஒரு ஆடும்,பல்லடம் ஆட்டு சந்தையில் இருந்து ஒரு ஆடு என, 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து, இரண்டு ஆடுகள் வாங்கினேன். மேய்ச்சலுக்காகஅருகில் உள்ள காட்டுப் பகுதியில் கட்டி வைத்திருந்தேன். திடீரென, ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. அருகில் சென்ற பார்த்தபோது, சில தெருநாய்கள், இரண்டு ஆடுகளையும் கடித்துக் குதறிக் கொண்டிருந்தன.நாய்களை விரட்டிவிட்டு சென்று பார்க்கையில் இரண்டு ஆடுகளும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தன. இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தெரு நாய்களை கட்டுப்படுத்தநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.