ஒரே நாளில் 2 குறைதீர் கூட்டம்; விவசாயிகள் அதிருப்தி
உடுமலை: மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டமும், உடுமலையில் வனத்துறை குறை கேட்பு கூட்டமும் ஒரே நாளில நடப்பதால், விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளன். திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், மாதந்தோறும், நான்காவது வெள்ளிக்கிழமை நடக்கிறது. கடந்த மாதம் இக்கூட்டம் நடக்காத நிலையில், விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், நாளை (10ம் தேதி) திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், உடுமலை பகுதிகளில் காட்டுப்பன்றிகளால் பாதிப்பு மற்றும் வன எல்லை கிராமங்களில், வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மாதந்தோறும் வனத்துறை சார்பில், விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடத்தப்படும். நடப்பு மாதத்திற்கு, நாளை (10ம் தேதி) நடக்கும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். ஏற்கனவே, மாவட்ட கலெக்டர் குறை தீர் கூட்டம், 10 நாட்களுக்கு முன் அறிவித்த நிலையில், வனத்துறையினர் அதனை கவனத்தில் கொள்ளாமல், அதே நாளில் கூட்டம் நடத்தினால், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் வனத்துறை குறை தீர் கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. வனத்துறையினர் பெயரளவிற்கு குறை தீர் கூட்டம் நடத்தாமல், விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையில், கூட்டம் நடத்தும் தேதியை மாற்றி அமைக்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர்.