3 நாளில் திருப்பூரில் இருந்து 2.10 லட்சம் பேர் பயணம்
திருப்பூர்; திருப்பூரில் இருந்து பொங்கல் சிறப்பு பஸ், 10ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில், 2.10 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இன்று சிறப்பு பஸ் இயக்கம் நிறுத்தப்படுகிறது.திருப்பூரில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, தாராபுரம் ரோடு - கோவில்வழி, மத்திய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 502 சிறப்பு நடைகளுக்கு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. 10ம் தேதி இரவே சிறப்பு பஸ் இயக்கம் துவங்கினாலும், 11ம் தேதி மற்றும், 12ம் தேதி இரவு மெல்ல கூட்டம் அதிகரித்தது.நேற்று போகி பண்டிகை பள்ளிகள் இயங்கியதால், நேற்று காலை பஸ்களில் கூட்டமில்லை. அதே நேரம், மாலைக்கு பின் துவங்கி, இரவு வரை புதிய பஸ் ஸ்டாண்ட், கோவில்வழியில் கூட்டம் அலைமோதியது.கடந்த, 10, 11 மற்றும், 12ம் தேதிகளில், 2.10 லட்சம் பேர் மூன்று பஸ் ஸ்டாண்டுகளில் இருந்தும் வெளியூர் பயணித்திருப்பர். அதிகபட்சமாக நேற்று மட்டும், 60 ஆயிரம் பயணிகள் சொந்த ஊர் சென்றதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.நான்கு நாட்கள் பஸ் இயங்கிய நிலையில், சிறப்பு பஸ் இயக்கம் இன்று நிறுத்தப்படுகிறது. இன்று முதல் 16 ம் தேதி வரை சிறப்பு பஸ் இயக்கம் இருக்காது; கூட்டத்துக்கு ஏற்ப வழக்கமான பஸ்கள் மட்டும் இயக்கப்படும். பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வரும், 17ம் தேதி இரவு முதல் மீண்டும் சிறப்பு பஸ் இயக்கப்படும். ரயில்களிலும் கூட்டம்
நேற்று, சென்னையில் இருந்து திருப்பூர் வந்த கோவை, இன்டர்சிட்டி, சேரன், நீலகிரி ரயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்பதிவில்லா பொது பெட்டியில் நின்றபடி பயணித்த வந்த பயணிகள் பலர் அப்பாடா என பிளாட்பார்மில் இறங்கினர்.கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட ரயில்களில் ஈரோடு, சேலம், பொம்மிடி, வேலுார், வாணியாம்பாடி, காட்பாடி, அரக்கோணம் செல்ல கூட்டம் அதிகமாக இருந்தது.நாகர்கோவில், திருச்சி பாசஞ்சர் ரயில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.