ரேஷன் கடைகளுக்கு 23 நாள் விடுமுறை
உடுமலை; நடப்பாண்டில், ரேஷன் கடைகளுக்கு அரசு பொது விடுமுறை, 23 நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமிழ்நாடு அனைத்து ரேஷன் கடை பணியாளர் சங்க மாநிலத்தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள், பொது வினியோக திட்டங்களின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு அரசு பொது விடுமுறை மொத்தம், 11 நாட்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்தாண்டு நவ., மாதம் இதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டது.ரேஷன் கடை பணியாளர்களின் கூடுதல் பணிச்சுமை, உடல் நலம், மன நலம் மற்றும் குடும்ப நிலை ஆகியவற்றைக்கருத்தில் கொண்டு, அரசுத்துறைகள் போன்று ரேஷன் கடைகளுக்கும் உரிய அரசு பொது விடுமுறை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து, தற்போது, உணவுப் பொருள் வழங்கல் துறை திருத்திய விடுமுறை பட்டியல் குறித்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.அதன்படி, அரசு துறை அலுவலகங்கள் போல், 23 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக ரேஷன் கடைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.