திருப்பூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் 3 பேர் கைது: 7 பிரிவுகளில் வழக்கு
திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், பணியில் இருந்த பயிற்சி டாக்டரை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், நேற்று முன்தினம் இரவு, பயிற்சி டாக்டர் கார்த்திக் பணியில் இருந்தார். கோவில் வழியை சேர்ந்த தீபக், கார்த்திக் ஆகியோர், சாலை விபத்தில் காயமடைந்த நிலையில், அவர்களது நண்பர்கள், உறவினர்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அவருக்கு முதலுதவி வழங்கிய டாக்டர்கள், 'எக்ஸ்ரே' பரிசோதனை மேற்கொள்ள காத்திருக்குமாறு கூறியுள்ளார். சிறிது காலதாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த தீபக், கார்த்திக்கின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலர், அங்கு பணியில் இருந்த, பயிற்சி டாக்டர் கார்த்திக் முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கினர். அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவமனை வளாகத்தில் இருந்த புறக்காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, போலீசார் அங்கு வந்து, டாக்டரை தாக்கியவர்களை பிடித்து, விசாரித்தனர். டாக்டர் கார்த்திக் முருகன் கொடுத்த புகாரின் பேரில், தேவேந்திரன், தேவக்குமார் , பாரதிராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது, 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி டாக்டரை தாக்கும் வீடியோ, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியிருந்தது.இது குறித்து, திருப்பூர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். பாதுகாப்பு அதிகரிக்கணும்! திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அலுவலர்கள் கூறுகையில், 'மருத்துவனை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு, தீபாவளி பண்டிகையன்று இரவு, கூடுதல் நபர்கள் சிகிச்சைக்கு வந்தனர். அப்போது, பயிற்சி மருத்துவரை, நோயாளியுடன் வந்த சிலர் தேவையின்றி தாக்கியுள்ளனர். தற்போது அவசர சிகிச்சைப்பிரிவில், நோயாளிகள் அதிகம் பேர் கூடுவதால், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்,' என்றனர்.