ஆர்.சி., புக் தந்து 4 மாதம் கடந்தது ஸ்கூட்டரை காட்டவே இல்லை: மாற்றுத்திறனாளி இளைஞர் குமுறல்
திருப்பூர் ; ஆர்.சி.,புக் கிடைத்து நான்கு மாதங்களாகியும் இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டரை கண்ணில் கூட காட்டாததால், வேலைக்குச் செல்லும் மாற்றுத்திறனாளி இளைஞர் வேதனை அடைந்துள்ளார்.திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம், இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டருக்கு பயனாளிகள் தேர்வு செய்வதிலும், ஸ்கூட்டர் வழங்குவதிலும் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன. இதனால், தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாற்றுத்திறனாளி இளைஞருக்கு, ஆர்.சி., புக் மட்டும் அனுப்பிவிட்டு, நான்கு மாதங்களாகியும் ஸ்கூட்டரை கண்ணில் காட்டாமல் 'மாயாஜாலம்' செய்கின்றனர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினர்.திருப்பூர், கருவம்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஸ்வரன், 26. மாற்றுத்திறனாளி. 70 சதவீதம் உடல் பாதிப்புள்ள இவர், இணைப்பு சக்கரம் பொருத்திய இலவச ஸ்கூட்டர் பயனாளியாக தேர்வு செய்யப்பட்டார்.இவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஸ்கூட்டர், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், TN39DD9039 எண்ணில் பதிவு செய்யப்பட்டது. கடந்த ஜனவரி மாதம், வெங்கடேஸ்வரன் கையில் ஆர்.சி., புக் கிடைத்தது. நான்கு மாதங்களான நிலையில், இன்னும் அவரது பெயரில் பதிவு செய்யப்பட்ட ஸ்கூட்டரை வழங்காமலும், கண்ணில் கூட காட்டாமலும் இழுத்தடிக்கின்றனர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக அதிகாரிகள்.