ஆண்டுதோறும் வீணாகும் 4 டி.எம்.சி., நீர்
திருப்பூர் : அமராவதி ஆற்றின் குறுக்கே காங்கயம் பகுதியில் தடுப்பணைகள் இருந்தால், ஆண்டுக்கு 4 டி.எம்.சி., நீர் வீணாவதைத் தடுக்க முடியும். மயில்ரங்கம் பகுதியில், தடுப்பணை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கேரள மாநில எல்லையில் உருவாகி, திருப்பூர் மாவட்டம், உடுமலை, தாராபுரம், காங்கயம் பகுதிகளைக் கடந்து 200 கி.மீ., நீளத்துக்கும் மேல் பயணித்து அமராவதி ஆறு, கரூர் அருகே காவிரியில் சென்று சேர்கிறது. ஆற்றில் மழைக்காலங்களில் அதிகளவில் நீர் செல்கிறது. உடுமலை, தாராபுரம் பகுதிகளில் குடிநீர் ஆதாரமாகவும் இது உள்ளது. காங்கயம் அருகே, பல்வேறு கிராமங்களைக் கடந்து இந்த ஆறு செல்கிறது. இதில் எங்கும் தடுப்பணைகள் இல்லை. இதனால், ஆற்றில் பாயும் நீர் பெருமளவு பயன் தராத நிலை உள்ளது. ஆண்டு தோறும் சராசரியாக 4 டி.எம்.சி., அளவு நீர் வீணாகச் செல்கிறது.இதை முறையாகப் பயன்படுத்தும் வகையில், வெள்ளகோவில் அடுத்த மயில்ரங்கம் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. கன்னிவாடி பேரூராட்சி, மூலனுார் பேரூராட்சி, எரிசனம்பாளையம் ஊராட்சி வேலப்ப நாயக்கன் வலசு ஊராட்சிக்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இதன் மூலம் பயன்பெறும்.விவசாய கிணறுகள், குடிநீர் ஆதாரம், நிலத்தடி நீர் பெருகும். பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறும். கால்நடை வளர்ப்பபோர் பயன் பெறுவர். விவசாய தொழிலை விட்டு அருகேயுள்ள நகரங்களுக்கு வேலைக்குச் செல்வோர் தங்கள் சொந்த ஊரில் விவசாயத்தை மேம்படுத்துவர். கிராம பொருளாதாரம் உயரும்.---அமராவதி ஆறுகாங்கயம் அருகே, பல்வேறு கிராமங்களைக் கடந்து அமராவதி ஆறு செல்கிறது. இதில் எங்கும் தடுப்பணைகள் இல்லை. இதனால், ஆற்றில் பாயும் நீர் பெருமளவு பயன் தராத நிலை உள்ளது.
மயில்ரங்கத்தில் தடுப்பணை
முதல்வர் அறிவிப்பாரா?வெள்ளகோவில் அடுத்த மயில்ரங்கம் பகுதியில், தடுப்பணை கட்டுவதால் ஏற்படும் பயன்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான சாமிநாதனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. கடந்தாண்டு ஈரோடு பொதுப்பணித் துறை நீர்வளத்துறை சார்பில் தடுப்பணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.தற்போதைய பட்ஜெட்டில், பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று இப்பகுதியினர் எதிர்பார்த்தனர். எந்த அறிவிப்பும் இல்லை. நேற்று முன்தினம் முத்துாரில் நீர் வளத்துறை சார்பில், 2.30 கோடியில் வாய்க்கால் சீரமைப்பு, 3 கோடி ரூபாயில், தாராபுரத்தில் அமராவதி வாய்க்கால் சீரமைப்பு பணிகள் துவக்கி வைக்கப்பட்டன. மயில்ரங்கம் அணைக்கட்டு குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை.சட்டசபையில், 110 விதியின் கீழ் முதல்வர் இது குறித்து அறிவிப்பு வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.