உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  வருவாய்த்துறையினர் 41 சதவீதம் பேர் ஆப்சென்ட் :வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் தொய்வு

 வருவாய்த்துறையினர் 41 சதவீதம் பேர் ஆப்சென்ட் :வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் தொய்வு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, வருவாய்த்துறையினர் 41 சதவீதம் பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தமும் நடைபெற்றதால், வாக்காளர் தீவிர திருத்த பணியில் சுணக்கம் ஏற்பட்டது. தேர்தல் கமிஷன் அறிவித்தபடி, தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த களப்பணிகள், கடந்த 4ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. பி.எல்.ஓ.,க்களாக நியமிக்கப்பட்டுள்ள சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர், ஆசிரியர்கள், வாக்காளர்களின் வீடு தேடிச்சென்று, தீவிர திருத்த படிவம் வழங்கி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 24.44 லட்சம் வாக்காளர் உள்ளனர். இவர்களுக்கு படிவம் வழங்கும் பணிகளில், 2,536 பி.எல்.ஓ.,க்கள் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு, கடந்த 2002 பட்டியலில் உள்ள விவரங்களை ஆன்லைனில் தேடி கண்டுபிடித்து கொடுப்பது, படிவம் பூர்த்தி செய்ய உதவுவது, வாக்காளரிடமிருந்து பெறப்பட்ட பூர்த்தி செய்த படிவங்களை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பணிகளில், வருவாய்த்துறை, கூட்டுறவு, வட்டார வளர்ச்சி என, ஒட்டுமொத்த அரசு துறை அலுவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உரிய திட்டமிடுதலின்றி, பயிற்சி அளிக்காமல் அவசர கதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி மேற்கொள்ளப்படுவதாக கூறி, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு, எஸ்.ஐ.ஆர். பணிகளை புறக்கணிப்பு செய்வதாக அறிவித்தது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் நேற்று, வி.ஏ.ஓ. முதல் தாசில்தார் வரையிலான வருவாய்த்துறையினர், 1,074 பேரில், 41 சதவீதம் பேர், அதாவது 440 பேர், ஆப்சென்ட் ஆகினர். அனைத்து சங்கங்கள் கரம் கோர்ப்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்பன உள்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, ஜாக்டோஜியோ சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர், ஊரக வளர்ச்சி வருவாய்த்துறை உள்பட அரசு துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அலுவலர்கள் வருகை குறைவால், தாலுகா அலுவலகங்கள், ஊரக வளர்ச்சி உள்பட அரசு துறை அலுவலகங்கள், வெறிச்சோடி காணப்பட்டன. மாவட்டத்தில் நேற்று, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளின் வேகமும் குறைந்தது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத வருவாய்த்துறை, ஆசிரியர்கள் உள்பட அனைத்து அரசு துறையினர், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளில் ஈடுபட்டனர். திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று, வாக்காளரிடமிருந்து பெறப்பட்ட தீவிர திருத்த படிவங்களை, மொபைல் போன் செயலி வாயிலாக ஆன்லைனில் பதிவு செய்யும் பணிகளில், அரசு அலுவலர்கள் பிஸியாக காணப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி